சஞ்சு சாம்சனுக்கு இவ்ளோ ஆதரவா? கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் சம்பவம் -வாய்பிளக்க வைத்த ரசிகர்கள்
தோஹா: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண சென்ற இந்திய ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேனர்களை காட்டினர்.
இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய இந்திய அணியில் வீரர்கள் தேர்வு, கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இதனை தொடர்ந்து தேர்வுக் குழுவையே மொத்தமாக கலைப்பதாக அறிவித்தது பிசிசிஐ. உலகக்கோப்பை முடிந்தவுடன் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வெற்றி பெற்றது.

சாம்சன் சேர்ப்பு
அதை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான 2 ஆம் தர இந்திய அணி
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களை எடுத்தார். அந்த போட்டியில் இந்திய அணி 306 ரன்களை குவித்தாலும் தோல்வியே அடைத்தது.

மீண்டும் நீக்கம்
பந்துவீச்சாளர்களின் சொதப்பல் ஆட்டம், ரிஷப் பண்டின் தொடர் ஃபார்ம் அவுட் ஆகியவை இந்த தோல்விக்கான முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், ஆல்ரவுண்டர் வேண்டும் என்ற காரணத்துக்காக தீபக் ஹூடாவையும், தீபக் சஹாரையும் அணியில் சேர்த்துவிட்டு, நேற்று நடைபெற்ற 2 வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

உள்நோக்கம்
நேற்று நடைபெற்ற போட்டி மழையால் கைவிடப்பட்டாலும், ரசிகர்கள் சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்டதை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஃபார்ம் அவுட் ஆகி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்டை அணியில் இருந்து நீக்காமல் ஒரே போட்டியில் விளையாட வைத்துவிட்டு சஞ்சு சாம்சனை நீக்கியதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என பலர் குற்றம்சாட்டினர்.

ஹேஷ்டேக்
இந்த நிலையில் நேற்று ட்விட்டரில் #justiceforsanjusamson என்ற ஹேஷ்டேக்கையும் பலர் டிரெண்ட் செய்து அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்கள். பிசிசிஐ சாதி அடிப்படையில் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதாக கூறி கடந்த வியாழக்கிழமை சாதிவெறி பிசிசிஐ என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

பிபா உலகக்கோப்பை
இந்த நிலையில் ஒருபடி மேலே போய் கத்தாரில் நடைபெறும் பிபா கால்பந்து உலகக்கோப்பையை காண சென்ற இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேனர்களை எடுத்துச் சென்று அங்கு உயர்த்திப் பிடித்து இருக்கிறார்கள். "கத்தாரில் இருந்து ஏராளமான அன்புகள். உங்களுக்கு எங்கள் ஆதரவு இருக்கும் சஞ்சு சாம்சன்." என்று அவர்கள் பேனரில் அச்சிட்டு உள்ளார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்
அதேபோல், "போட்டிகள், அணிகள், வீரர்களை கடந்த நாங்களும் உங்களோடு இருக்கிறோம் சஞ்சு சாம்சன்." என மற்றொரு பேனரை உயர்த்திப் பிடித்து ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார்கள். இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. இந்திய அணியிலிருந்து புறக்கணிப்புகள் அதிகரிக்கும் அதே நேரம் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவும் பெருகி வருவதை இதன் மூலம் பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications