ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழா... தமிழிசை பொழியவுள்ளார் மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, மக்களிசைப் பாடகர் ஜெயமூர்த்தி பங்கேற்று இசைப்பாடல்களை வழங்கிட உள்ளனர்.

நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்த காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொளிக்கும்.

FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, singer Jayamoorthy is a Chief guest.

இவ்வாறான பாடல்கள் வாய்மொழி மரபாக கையளிக்கப்பட்டு வந்தாலும் பெரும்பாலும் அதிக மாற்றத்துக்கு இலக்காகாமல் பேணப்படுகின்றன. அதேவேளை இவற்றின் இயற்றுனர்கள் என்று எவரையும் குறிப்பிடமுடியாத வகையில் இவை பொதுவழக்கில் பயன்பாட்டிற்கு வந்துவிடுகின்றன.

இத்தகைய பாடல்களை, அந்தந்த நிலத்திற்கே சென்று, அந்த மக்களிடையே எப்படியாக இடம் பிடிக்கிறது என்பதையெல்லாம் ஆய்ந்து, அவற்றுக்கு இசைக்கூட்டிப் பாடி வருபவர்தான் மக்களிசைக் கலைஞர் ஜெயமூர்த்தி. இவர் நாட்டுப்புறக்கலைகளையும் பயின்று, அதற்கான பாடல்களையும் சேகரித்து, மரபுக்கலைகளுக்கும் மரபிசைக்கும் பெருமை சேர்த்து வருகிறார்.

மக்களிசைப் பாடல்களைச் சேகரித்துப் போற்றுவதோடு மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் தெரிஞ்சு போச்சுடா' என்ற சூப்பர் ஹிட் பாடலை பாடியவர் ஜெயமூர்த்தி.

அதையடுத்து, இது கதிர்வேலன் காதல் படத்தில், பல்லக்கு தேவதையே பாடல் உள்பட இதுவரை 20 படங்களில் பாடியிருக்கிறார். இந்த படங்களுக்கு முன்பு, கில்லி, தவமாய் தவமிருந்து, மாயாண்டி குடும்பத்தார், வாகை சூடவா, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு போன்ற படங்களிலும் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.

மேலும், சினிமாவில் பாடுவதற்கு முன்பே திருவிழா, தூவானம் என பல நாட்டுப்புற இசைத் தொகுப்புகளுக்கு இசையமைத்து பாடியிருக்கிறார். வர்ணம் உள்பட சில படங்களில் தானே பாட்டெழுதியும் பாடியிருக்கிறார்.

தமிழின் தொன்மை என்பது நாட்டுப்புற, வாய்மொழி இலக்கியங்களில் சிப்பிக்குள் முத்துப் போல காலங்காலமாய் நமக்குக் கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஊரகக்கடலின் ஆழத்திற்குச் சென்று மீட்டெடுத்துப் பயன் கொள்ள வேண்டியிருக்கிறது.

அதனை நுகரும் போது கிடைக்கும் இன்பம் பேரின்பம். இந்த பொருளியல் உலகத்திலும் பொருள் சேர்க்கும் எத்தனையோ வணிகத் தேடல்களையும் கடந்து தமிழ்நிலத்தின் மூலைமுடக்குகளுக்கும் சென்று கிராமிய பாடல்களைச் சேகரித்துள்ளவர்.

கிராமத்துப் பாடல்கள், சொலவடைகள், அந்த கிராமத்து எளிய மக்கள் பாடும் தொனி, மெட்டு முதலானவற்றை அதனதன் நேர்த்தி குறையாமல் முத்துக்குளித்து இசை கோர்த்துத் தரும் பணியைச் செய்து கொண்டிருக்கும் பண்ணிசைப்பாடகர் ஜெயமூர்த்தி, பாடலை அதன் மெட்டோடு பாடுவதுமட்டுமின்றி, அதனதன் விழுமியக்கூறுகள், அந்தந்த நிலப்பகுதியின் பண்பாட்டுக்கூறு, மரபு முதலானவற்றை அவர் சொல்கிற போது கிடைத்த சுவையின்பம் அலாதியானது.

அந்தந்தப் பாடலுக்கு எத்தகைய நடனம் இயைந்து வருமென்பதையும் அவர் சொல்லச் சொல்ல கிடைத்த தகவல் ஆச்சரியமாக இருக்கிறது.

இவரது இசையமைப்பில் தமிழ்ச்சங்கங்களும் இணைந்து கொள்ள, இடம் பெறப்போவதுதான் தமிழ்மரபிசை நிகழ்ச்சி. மரபுக்கலைகளும் மரபிசையும் நிகழ்கலையாய் இடம் பெறப்போகிறது.

தமிழ்நிலத்தின் அத்தனை மரபுக்கலைகளும் பாடல்களும் வடித்துச் சுவைக்க நீங்களும் ஆவல்தானே? அமெரிக்கத் தமிழர்களைத் தேடிவந்து உங்களுக்குப் படைக்கப்படவிருக்கிற பேரின்ப நிகழ்ச்சியை காண அமெரிக்கத் தமிழ்விழாவை நோக்கியே என் மனம் இருக்கிறது. நீங்களும் வாருங்கள். சேர்ந்து அனுபவிப்போம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
FeTNA 2017 : Federation of Tamil Sangams of North America Tamils function, singer Jayamoorthy is a Chief gust at Minneapolis Convention Center in Minnesota.
Please Wait while comments are loading...