இந்தியாவுக்கு புதிய சிக்கல்! ரஷ்யாவிடம் கெஞ்சும் ஈரான்! என்ன முடிவெடுக்கப்போகிறார் புதின்?
மாஸ்கோ: ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பான S-400-ஐ வாங்க ஈரான் முயற்சித்து வருகிறது. ஏற்கனவே நமக்கு சரியான நேரத்தில் வந்து சேர வேண்டிய 4,5வது S-400 ரெஜிமெண்ட்கள், ரொம்பவும் கால தாமதமாக வந்து சேர்ந்தன. இப்படி இருக்கையில், ஈரானின் ஆர்டரை ரஷ்யா ஏற்கிறது எனில்.. நமக்குதான் தலைவலி.
S-400 என்பது சாதாரண வான் பாதுகாப்பு அம்சம் கிடையாது. அமெரிக்காவே பார்த்து பயப்படும் அளவுக்கு மிகவும் கெட்டிக்காரத்தனமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு ஆயுதமாகும்.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பு சென்னையில் வைக்கப்பட்டிருக்கிறது எனில்.. சுமார் 600 கி.மீ தூரத்திலிருந்து இந்தியப் பெருங்கடலிலிருந்து சென்னையை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டால் கூட, இந்த அமைப்பால் எளிதாக கண்டுபிடிப்பிடித்துவிட முடியும். அந்த ஏவுகணை மதுரையை தாண்டுவதற்குள், தாக்கி அழித்துவிடும். அதாவது சென்னைக்கு 400 கி.மீ தூரத்திலேயே ஏவுகணை, போர் விமானம் என எது வந்தாலும் அழித்துவிடும். எனவேதான் சர்வதேச நாடுகளுக்கு நடுவில் இதற்கு மவுசு அதிகமாக இருக்கிறது.
இதில் ஆச்சரியப்படும் மேட்டர் என்னவெனில், இந்த அட்டகாசமான S-400 அமைப்பை ஈரான் ஆரம்பத்தில் வேண்டாம் என்றுதான் சொன்னது. எங்களிடம் இதைவிட மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. எனவே, இது எங்களுக்கு வேண்டாம் என்பதுதான் ஈரானின் ஆரம்பக்கால நிலைப்பாடு. ஆனால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நடத்திய கூட்டு தாக்குதலில், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு மொத்தமும் காலி. எனவே உடனடியாக ஒரு வான் பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது. ஆகவேத்தான் S-400 ஈரானுக்கு தேவைப்படுகிறது.
ஈரானின் பாதுகாப்பு தலைவர் மொஹ்சென் ரெசாயி, உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் தனிப்பட்ட கடிதத்துடன் மாஸ்கோ சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்திருக்கிறார். S-400 ஒப்பந்தத்திற்கு புடினின் பச்சைக்கொடி கிடைக்கும் என ஈரான் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இப்போதுதான் ரஷ்யாவின் சுகோய் SU-35 போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் முடித்திருந்தது. இதுபோக.. ஹெலிகாப்டர்களில் இருந்து ஏவப்படும் 90 ஏவுகணை லாஞ்சர்களை ஈரானுக்கு வழங்க ரஷ்யா ஏற்பாடு செய்திருந்தது.
இப்படி இருக்கையில் S-400 கேட்டிருப்பது, இந்தியாவுக்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது. ஏனெனில் நாம் ஏற்கெனவே 5, S-400 அமைப்பை ஆர்டர் கொடுத்திருக்கிறோம். உக்ரைன் போர் காரணமாக இன்னும் நாம் கொடுத்த ஆர்டர் நம் கைக்கு கிடைக்கவில்லை. ஒவ்வொரு S-400 ரெஜிமென்ட் அமைப்பை தயாரிக்க குறைந்தது 1.5லிருந்து 3 ஆண்டுகள் வரை ஆகும்.
ஒரு S-400 ரெஜிமென்ட் என்பது, 2 பட்டாலியன்கள், 16 ஏவுகணை லாங்சர் வாகனங்கள், நீண்ட தூர ரேடார்கள், கமாண்ட் சென்டர்கள் மற்றும் ஏவுகணைகளை மீண்டும் நிரப்பும் வாகனங்களை கொண்டிருக்கும். இவை அனைத்தையும் தனித்தனியாக தயாரித்து ஒருங்கிணைக்க நீண்ட காலம் எடுக்கும். உதிரிபாகங்கள் தயாரிப்பு, மின்னணு மென்பொருள் ஒருங்கிணைப்பு மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி சோதனைகள் முடிந்த பின்னரே இவை ஒப்படைக்கப்படும்.
இவ்வளவு வேலை இருப்பதால், தற்போது ஈரான் புதிய ஆர்டர் கொடுத்தால் இந்தியாவுக்கான ஆர்டர் இன்னும் லேட்டாக வாய்ப்பு இருக்கும் என்று சர்வதேச ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications
