டாடா நிறுவனத்தை மிரட்டும் கென்யா! "உடனே எங்க நாட்டை விட்டு போங்க.." என்ன தான் நடக்கிறது
நைரோபி: கென்யாவில் செயல்பட்டு வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம், உடனடியாக தனது செயல்பாடுகளை நிறுத்திவிட்டு வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ உத்தரவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக கென்யாவில் இயங்கி வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தால் அந்த நாட்டுக்கு போதுமான பலனை அளிக்கவில்லை என்று அதிபர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதையடுத்து டாடா குழுமத்துக்கும் கென்யா அரசுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
கென்யாவின் காஜியாடோ கவுன்டியில் உள்ள லேக் மகாடி பகுதியில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிசிஎம்எல் (Tata Chemicals Magadi Limited)செயல்பட்டு வருகிறது. சோடா ஆஷ் உற்பத்தி நிறுவனமான இதை கடந்த 2005ஆம் ஆண்டு டாடா கெமிக்கல்ஸ் கையகப்படுத்தியது.

டாடா நிறுவனம்
காஜியாடோ பகுதிக்கு வியாழக்கிழமை சென்ற கென்ய அதிபர் ரூட்டோ, டாடா கெமிக்கல்ஸ் பல ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு வந்தாலும், அந்த பகுதியில் போதுமான தொழிற்சாலை மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். அவர் மேலும், "100 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் உள்ளது. ஆனால் காஜியாடோவில் ஒரு தொழிற்சாலையை கூட கட்டவில்லை. நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு பதிலாக இரண்டு புதிய நிறுவனங்களை கொண்டு வர கென்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் ரூட்டோ தெரிவித்தார். அதில் ஒரு நிறுவனம் காஜியாடோவில் மிக பெரிய கண்ணாடி உற்பத்தி ஆலையை அமைக்க வேண்டும் என்றும் மற்றொரு நிறுவனம் ரசாயனங்களை உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது கனிம வளங்களை வெறுமனே எடுத்து ஏற்றுமதி செய்வதை விட அதை உள்ளூரிலேயே உற்பத்தி செய்து வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு அதிகரிக்க வேண்டும் என்பதே கென்ய அரசின் முக்கிய வலியுறுத்தலாக உள்ளது.
மோதல்
இந்த மோதல் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து வருகிறது. முன்னதாக கடந்த ஜூலை 28ஆம் தேதி, அப்போது கென்யாவின் சுரங்கத்துறை அமைச்சர் ஹசன் ஜோஹோ, டாடா கெமிக்கல்ஸ் மகாடி நிறுவனத்தின் அனைத்து சுரங்க நடவடிக்கைகளையும் நிறுத்த உத்தரவிட்டார். ராயல்டி கணக்குகள் மற்றும் பணம் செலுத்துதல், ஏற்றுமதி தகவல்கள், சமூக மேம்பாட்டு ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பா மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டாடா நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டதாக கென்ய அரசு தெரிவித்தது.
ஆனால், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதாக தெரிவித்தது. கென்ய சுரங்க அமைச்சகம் கேட்ட அனைத்து தகவல்கள், அறிக்கைகள் மற்றும் ஆவணங்களையும் ஆகஸ்ட் 11ஆம் தேதி சமர்ப்பித்ததாகவும் டாடா நிறுவனம் கூறியுள்ளது.
விளக்கம்
மேலும், கென்ய அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் டாடா கெமிக்கல்ஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதில் தனது செயல்பாடுகளால் ஆயிரக்கணக்கானோர் பயனடைவதாக தெரிவித்துள்ளது. சுமார் 500 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மட்டுமின்றி, ஒப்பந்ததாரர்கள், சப்ளையர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் என பலர் அந்த ஆலையை சார்ந்திருப்பதாக டாடா கூறியுள்ளது. சுமார் 30,000 பேரின் குடிநீர், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாடு ஆகியவற்றுக்கும் உதவுவதாகவும் டாடா கெமிக்கல்ஸ் தெரிவித்துள்ளது.
சோடா ஆஷ் என்பது கண்ணாடி, சோப்பு மற்றும் பிற ரசாயனங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்துறை மூலப்பொருளாகும். நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. லேக் மகாடியில் இயற்கையாக கிடைக்கும் ட்ரோனா என்ற கனிமத்திலிருந்து சோடா ஆஷ் தயாரிக்கப்படுகிறது. டாடா கெமிக்கல்ஸ் மகாடி நிறுவனம் ஆண்டுக்கு 3.5 லட்சம் டன்னுக்கும் அதிகமான சோடா ஆஷை இந்தியா, தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
அடுத்து என்ன
டாடா கெமிக்கல்ஸ் தரப்பில் சமர்ப்பித்த ஆவணங்களை கென்ய அரசு பரிசீலிக்கும் என தெரிகிறது. பிரச்சினையை சட்ட வழிகளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க தயாராக இருப்பதாகவும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமே என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் டாடா விதிமீறல் குறித்து மட்டும் பேசாமல் அந்நாட்டு அதிபர் ரூட்டோ வேறு நிறுவனங்களை கொண்டு வருவது குறித்தும் பேசியுள்ளார். எனவே, ஏற்கனவே ஒரு திட்டம் போட்டே அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பது போல தெரிகிறது.
பல ஆண்டுகளாக கென்யாவில் இயங்கி வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கும் கென்ய அரசுக்கும் இடையிலான மோதல் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் உள்ளூர் வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் கனிம வளங்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்க வேண்டும் என கென்ய அரசு வலியுறுத்துகிறது. மறுபுறம், தாங்கள் விதிமுறைகளை பின்பற்றி வருவதாகவும், மகாடி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் செயல்பாடுகளால் பயனடைவதாகவும் டாடா கெமிக்கல்ஸ் கூறுகிறது. அடுத்து இதில் என்ன நடக்கும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.!


Click it and Unblock the Notifications
