மலேசிய விமான பயணிகளின் உடல்களை ரயில்களில் ஏற்றிச் சென்ற புரட்சிப் படையினர்
கீவ்: உக்ரைனில் மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடல்களை ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப்படை தீவிரவாதிகள் ரயில்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர் ஆஸ்ம்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் 196 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்களை ரஷ்ய ராணுவ ஆதரவுப்படை தீவிரவாதிகள் மீட்புக் குழவினரை மிரட்டி அவற்றை ரயில்களில் ஏற்றிச் சென்றதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் விமானம் விழுந்த இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள டோரஸில் இருந்து ரயில்களில் சடலங்களை ஏற்றியுள்ளனர். அந்த சடலங்கள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள டோனட்ஸ்குக்கு கொண்டு சென்றதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சடலங்கள் உக்ரைன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கார்கிவில் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உக்ரைன் எதிர்பார்க்கிறது. ஆனால் தீவிரவாதிகள் சடலங்களை ஒப்படைப்பார்களா என்று தெரியவில்லை.