உணவு முதல் மின்சாரம் வரை தட்டுப்பாடு.. தத்தளிக்கும் பாகிஸ்தான்! ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
பாகிஸ்தானுக்கு உதவ ஐஎம்எஃப் முன்வந்தாலும் அது விதிக்கும் நிபந்தனையை ஏற்க பாகிஸ்தான் தாமதித்து வருவதால் நெருக்கடி முற்றி வருகிறது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அந்நாட்டின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக சரிந்துள்ளது. அந்நாடு சுதந்திரம் பெற்று உருவானதிலிருந்து இந்த அளவுக்கு இதன் மதிப்பு இவ்வளவு சரிந்ததில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தான் கடந்த காலங்களில் எதிர்கொண்ட திடீர் வெள்ளம், அதனால் உருவான உணவு பற்றாக்குறை போன்றவை ஏற்கெனவே நீடித்து வந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வேலையின்மை, எரிபொருள் விலையுயர்வு, மின்சாரம் துண்டிப்பு போன்றவை அந்நாட்டு மக்கள் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இதனை சரிசெய்ய அந்நாடு பிரதமர் ஷெபாஷ் ஷெரிஃப் சில சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு ஊழியர்களுக்கான ஊதியம் 10% குறைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், அமைச்சகங்களின் செலவினங்களை 15% குறைக்கவும், மத்திய/மாநில அமைச்சர்களின் ஆலோசகர்கள் எண்ணிக்கையை 78ல் இருந்து 30 ஆக குறைக்கவும் திட்டமிட்டு வருகிறது. இதற்காக அந்நாட்டு அரசு 'தேசிய சிக்கனக் குழுவை' கடந்த வாரம் உருவாக்கியுள்ளது. இந்த சிக்கன குழுவானது பாகிஸ்தானின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான நிதியை குறைக்க வலியுறுத்தியுள்ளது.

நிதி குறைப்பு
இதனால் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும். இந்த சிக்கன நடவடிக்கை இத்துடன் நில்லாமல் அந்நாட்டின் உளவு அமைப்பான இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) மற்றும் இன்டலிஜென்ஸ் பீரோ (ஐபி) போன்றவற்றிற்கான நிதியையும் குறைக்கவும் பரிந்துள்ளது. ஆனால் இது பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் அரசு இந்த ஐடியாவை ஏற்கவில்லை. மறுபுறம் நாட்டின் மின்துறை கடும் நஷ்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதன் கடன் ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 2.437 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

மின்சாரம்
எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறது. எனவே இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், ஷாப்பிங் மால்கள், சந்தைகள் ஆகியவற்றை மூட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மட்டுமல்லாது திருமண மண்டபங்களில் 10.30 மணியுடன் மின்சாரம் நிறுத்தப்படும். இது இப்படி இருக்க இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இத்தனை நெருக்கடிகளை சமாளிக்க பெரிய அளவில் நிதி தேவையாக இருக்கிறது. ஆனால், ஐஎம்எஃப் ஒதுக்கியுள்ள நிதி இன்னும் பாகிஸ்தான் கைகளுக்கு வந்து சேரவில்லை.

நிதியுதவி
இதனால் தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. அதாவது பாகிஸ்தான் ரூபாயில் 225 கொடுத்தால்தான் 1 அமெரிக்க டாலரை பெற முடியும் என்கிற அளவுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு சரிவை கண்டுள்ளது. இதனையெல்லாம் சமாளிக்க ஐஎம்எஃப் நிதியளித்தால்தான் முடியும். ஆனால் ஐஎம்எஃப் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு பாகிஸ்தான் தற்போது வரை ஒப்புதல் தெரிவிக்கவில்லை. எனவே ரூ5.29 லட்சம் கோடி நிதியுதவியை ஐஎம்எஃப் நிறுத்தி வைத்திருக்கிறது. இது கிடைத்தால் தற்போதைய நிலையை பாகிஸ்தானால் மாற்ற முடியும்.

அந்நிய செலாவணி
இத்துடன் பாகிஸ்தானின் அந்நிய செலாவணியும் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது ரூ.47,560 கோடி அளவில் மட்டுமே அந்நிய செலாவணி கையிருப்பில் இருக்கிறது. இது ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாகும். எனவே இதனை உயர்த்த வேண்டிய கட்டாயத்திலும் பாகிஸ்தான் அரசு இருக்கிறது. எனவே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கையை குறைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications