பதற்றம், வன்முறை..ரீப்ளே பார்த்த மாதிரி இருக்கே..இலங்கை-பாகிஸ்தானின் ஒற்றுமை.. கிளைமேக்ஸ் என்ன?
இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கைதை தொடர்ந்து பாகிஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் வன்முறையும் நடைபெற்று இருக்கிறது. இந்த போராட்டம் பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போராட்டத்தை அப்படியே பிரதிபலிப்பது போல் அமைந்துள்ளன.
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலிலும் கால் பதித்தவர் இம்ரான் கான். , 'பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய இம்ரான் கான் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியையும் அமைத்தார்.
4 ஆண்டுகள் இம்ரான் கான் ஆட்சி செய்த நிலையில், அவரது ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு ஆட்சியை கவிழ்த்தன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான் கான் பதவி பறிபோன நிலையில், தற்போது ஷெபாஸ் ஷெரிப் அங்கு பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இம்ரான் கான் ஊழல் புகார்கள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், நேற்று முன் தினம் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்றிற்கு ஆஜராக சென்றர். அப்போது திடீரென இம்ரான் கானை பாகிஸ்தான் ரேஞ்சர் படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இம்ரான் கான் கைதுக்கு எதிராக நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பதற்ற நிலவுகிறது.
பாகிஸ்தான் முழுவதும் பதற்றம் நீடித்து வரும் நிலையில், இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் கட்சியினர் போலீஸ் அதிகாரிகள் மீது பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசுவதாகவும், மரங்களையும், அரசு சொத்துகளையும் தீ வைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் கடும் வன்முறை நடைபெற்றது.
கலவரங்களை அடக்குவதற்கு அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையால் அங்கு 7 பேர் பலியாகியுள்ளனர். 300 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த போராட்டம் மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பாக இலங்கையும் இதேபோன்ற ஒரு சிக்கலைத்தான் எதிர்கொண்டது.
வரலாறு காணாத நிதி நெருக்கடியை தொடர்ந்து இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடும் போராட்டத்தை மக்கள் முன்னெடுத்தனர். இலங்கை அதிபர், பிரதமரின் இல்லங்கள் போரட்டக்கரர்களால் சூறையாடப்பட்டன. அதன்பிறகு கடுமையான நெருக்கடியால் இலங்கையில் ஆட்சியாளர்கள் ராஜினாமா செய்யும் நிலமையும் ஏற்பட்டது.
தற்போது பாகிஸ்தானில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் ரூபாய் மதிப்பு 288.5 ஆக சரிந்துள்ளது. போராட்டத்தால் பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்தது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தானுக்கு தற்போது இம்ரான்கான் கைதால் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ஆகியுள்ளது.
பாகிஸ்தானில் பங்குச்சந்தைகளிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு மத்தியில் நிதி நெருக்கடி மேலும் அதிகரித்தால் அந்த நாட்டின் ஆட்சி நிர்வாகத்திற்கும் கடும் சவாலை அளிப்பதாக இருக்கும் என்று சர்வதேச நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications