டிரம்பின் நண்பருக்கு வீட்டுக்காவல்.. ஒரே ஒரு டிஜிட்டல் வங்கியால் கிட்டத்தட்ட நாடே முடங்கியது!

Subscribe to Oneindia Tamil

அசுன்சியோன்: தென் அமெரிக்க நாடான பராகுவேயில் ஒரு டிஜிட்டல் வங்கியின் திடீர் வீழ்ச்சி, நாட்டையே பெரும் நிதி மற்றும் அரசியல் நெருக்கடியில் தள்ளியுள்ளது. சுமார் 65 லட்சம் மக்கள் வசிக்கும் நாட்டில், 30 லட்சம் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு பணத்தை எடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். பல நூறு மில்லியன் டாலர் அரசு நிதியும் ஆபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக கருதப்பட்ட பராகுவே அதிபர் சாண்டியாகோ பென்யா பதவி இழந்துள்ளார்.

பாரகுவே என்பது தென் அமெரிக்காவின் மையப்பகுதியில் ஒரு நாடாகும். சுமார் 65 லட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டின் அதிபராக சாண்டியாகோ பென்யா இருந்து வந்தார். இவர் டிரம்பின் நெருங்கி நண்பர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் இப்போது தனது அதிபர் பதவியை இழந்தது மட்டுமின்றி, வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்.

Paraguay Banking Crisis Paraguay Trump

என்ன நடந்தது!

இந்த ஒட்டுமொத்த பஞ்சாயத்திற்கும் மையக்கரு யூனோ வங்கி. குரூபோ வாஸ்கெஸ் என்ற குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த டிஜிட்டல் வங்கி, மிக குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து நாட்டின் முக்கிய நிதி நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. 2021ஆம் ஆண்டு பைனான்சியேரா எல் கொமெர்சியோ நிறுவனத்தை கையகப்படுத்திய குரூபோ வாஸ்கெஸ், அதை யூனோ வங்கியுடன் இணைத்தது. 2022 பிப்ரவரியில் டிஜிட்டல் வங்கி சேவையை தொங்கி, பிறகு 2024ஆம் ஆண்டு அங்குள்ள முக்கிய வங்கியான விஷன் வங்கியையும் கையகப்படுத்தி இணைத்து கொண்டது.

இதன் மூலம் சுமார் 30 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்ற யூனோ வங்கி, அரசு நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சொந்தமான சுமார் 850 மில்லியன் டாலர் நிதியையும் நிர்வகித்து வந்தது.

வங்கி வீழ்ச்சிக்கு என்ன காரணம்?

வங்கியின் நிதிநிலை மோசமடைந்ததுடன், கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வங்கியின் உரிமையாளர்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட்டதாகவும், அதற்கு போதிய ஜாமீன் பெறப்படவில்லை என்றும் தெரிய வந்தது.

இதனால் வங்கியின் மூலதன இருப்பு, சட்டப்படி இருக்க வேண்டிய குறைந்தபட்ச அளவைவிட பாதிக்கும் கீழே சரிந்தது. இதையடுத்து நவம்பர் 3ஆம் தேதி பராகுவே ரிசர்வ் வங்கி யூனோ வங்கியை தனது கண்டரோலில் கொண்டு வந்தது. வங்கியை மறுசீரமைத்து பிரச்சினைகளை சரி செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஸ்தம்பித்த பராகுவே

அரசு ஓய்வூதிய மற்றும் சுகாதார நிதிக்கு மட்டும் யூனோ வங்கியில் சுமார் 380 மில்லியன் டாலர் இருந்ததாக கூறப்படுகிறது. வங்கி மூலம் ஓய்வூதியம் பெற்றுவந்த 32,000 ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டனர். நாட்டின் மிக பெரிய வங்கிகளில் ஒன்று முடங்கியதால் கிட்டத்தட்ட நாடே ஸ்தம்பிக்கும் நிலை உருவானது.

இந்த விவகாரம் அரசியல் நெருக்கடியாக மாறியதற்கு அதிபர் பென்யாவுக்கும் குரூபோ வாஸ்கெஸுக்கும் இருந்த தொடர்பே முக்கிய காரணம். பொருளாதார நிபுணரான பென்யா, சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றியவர். முன்னாள் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார். 2023 ஆகஸ்டில் அதிபராகப் பதவியேற்றார். அவர் முன்பு குரூபோ வாஸ்கெஸில் பங்குகளை வைத்திருந்ததாகவும், தனது அதிபர் பதவியை பயன்படுத்தி யூனோ வங்கியின் வளர்ச்சிக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், 2025 மார்ச் மாதமே தனது பங்குகளை விற்றுவிட்டதாகவும், வங்கியில் நேரடியாக முதலீடு செய்யவில்லை என்றும் பென்யா மறுத்துள்ளார்.

வெடிக்கும் சர்ச்சை

மேலும், யூனோ வங்கி முதலில் கையகப்படுத்திய பைனான்சியேரா நிறுவனத்தை நடத்திய கார்லோஸ் கார்வல்லோவை பராகுவே ரிசர்வ் வங்கியின் தலைவராக நியமித்ததும் சர்ச்சையானது. வங்கி முடங்கியதால் சர்ச்சைகள் பெரிதாக வெடிக்க தொடங்கிய நிலையில், நவம்பர் 3ஆம் தேதி கார்வல்லோ பதவி விலகினார்.

வங்கி சரிந்த நிலையில், தலைநகர் அசன்சியோனில் போராட்டங்கள் வெடித்தன. நவம்பர் 4ஆம் தேதி எதிர்க்கட்சிகள் பென்யாவுக்கு எதிராக பதவி நீக்க நடவடிக்கையை தொடங்கின. நவம்பர் 5ஆம் தேதி அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனாலும் அவர் மீது பதவி நீக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டது. நவம்பர் 6ஆம் தேதி பென்யா பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கத்துக்கு பிறகு பென்யா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இப்படி தான் சாதாரணமாக ஒரு டிஜிட்டல் வங்கியாக தொடங்கிய ஒன்று, 30 லட்சம் வாடிக்கையாளர்களின் பணத்தை முடக்கியதுடன், ஒரு அதிபரின் அரசியல் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+