"அடுத்து ஐரோப்பாவுடன் போர்.!" வெளிப்படையாக எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்.. உச்சக்கட்ட பதற்றம்
மாஸ்கோ: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா இப்போது தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கிடையே ஐரோப்பாவுடன் போரை ஆரம்பிக்கத் தயாராக இருப்பதாகத் திடீரென புதின் கூறியுள்ளது பகீர் கிளப்பியுள்ளது. உக்ரைன் அமைதி ஒப்பந்தத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய ஐரோப்பிய தலைவர்கள் முயல்வதாக சாடிய அவர், இதனால் ஐரோப்பாவுடன் போர் நடத்தவும் தயார் எனக் கூறியிருக்கிறார்.
உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பல ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் சர்வதேச அளவில் பாதிப்புகள் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை நிறுத்த பல்வேறு தரப்பினரும் முயன்றனர். ஆனாலும், முடியவில்லை. இந்தச் சூழலில் தான் அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டார். அமைதி பேச்சுவார்த்தைகள் வேகம் பெற்றன.

புதின் தடாலடி
இதற்கிடையே ரஷ்ய அதிபர் புதின் தடாலடியாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் மோதல் அமைதி ஒப்பந்தத்தைச் சீர்குலைக்க முயல்வாக அவர் சாடினார். உக்ரைன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும் ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில் அதைச் சீர்குலைக்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முயல்வதாக அவர் சாடினார். மேலும், தேவை என்றால் ஐரோப்பாவுடன் போருக்குச் செல்லவும் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்தார்.
அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப், அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் இப்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோ வந்திருந்தனர். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு அமெரிக்கத் தலைவர்களின் முக்கியமான ரஷ்ய பயணமாக இது பார்க்கப்படுகிறது. போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் பயணம் உலகெங்கும் கவனிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
இந்தச் சூழலில் தான் ஐரோப்பிய நாடுகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஐரோப்பாவுடன் போரை ஆரம்பிக்க எங்களுக்கு எந்தவொரு திட்டமும் இல்லை. ஆனால் அவர்கள் விரும்பினால், இப்போதே அதற்குத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்கு அமைதியை உருவாக்க எந்தவொரு திட்டமும் இல்லை. போரை நிறுத்த முயலும் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளை ஐரோப்பிய தலைவர்கள் சீர்குலைக்கிறார்கள்.
உக்ரைன் போர் தொடர்பாக டிரம்ப் ஒரு அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்திருந்தார். அது நாங்கள் ஏற்கும் வகையில் இருந்தது. ஆனால், ஐரோப்பியத் தலைவர்கள் அதை மாற்ற முயன்றனர். அமைதிச் செயல்முறையை முற்றிலும் தடுக்கவும், ரஷ்யாவிற்கு ஏற்க முடியாத கோரிக்கைகளை முன்வைக்கவும் ஐரோப்பிய தலைவர்கள் முயல்கிறார்கள்" என்றார்.
அமெரிக்கா
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா 28 அம்ச வரைவுத் திட்டத்தை முன்மொழிந்தது. இருப்பினும், இது முழுக்க முழுக்க ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாக உக்ரைன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்கள் விமர்சித்தனர். மேலும், இந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் பல மாற்றங்களையும் முன்மொழிந்திருந்தனர்.
ஐரோப்ப தலைவர்கள்
ரஷ்யாவின் ஆதிக்கம் இருப்பதால் அநீதியான அமைதி ஒப்பந்தத்தைத் திணிக்கக் கூடாது என்று ஐரோப்பிய தலைவர்கள் வலியுறுத்தினர். இது இக்கட்டான சூழலில் இருக்கிறது. இது தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் டிரம்ப் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் ஐரோப்பிய தலைவர்களைக் கடுமையாகச் சாடும் வகையில் புதின் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications