
காப்பாத்த வந்த இடத்துல காப்பாத்திட்டியே! ரொம்ப தாங்க்ஸ் மா! துதிக்கை தூக்கி நன்றி சொன்ன குட்டி யானை!
பாங்காங் : தாய்லாந்து நாட்டில் வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வழி தவறி சேற்றில் சிக்கிய குட்டியானையை காப்பாற்றிய சிறுமிக்கு அந்த குட்டி யானை தனது தும்பிக்கையை தூக்கி நன்றி தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
யானைகள் இந்த உலகத்தில் அதிசயமும் மர்மமும் நிறைந்த விலங்குகள். ஒரு புறம் சுட்டித்தனமும் மறுபுறம் ஆக்ரோஷமும் கொண்ட விலங்குகள் என்றால் அது யானைகள் தான்.
இந்த உலகில் படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் பழக்கப்படுத்தி தனது தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் விலங்குகளில் மிகப்பெரியவை யானைகள். யானைகளை பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
ஏம்ப்பா, அது யானை.. குழந்தை கிடையாது.. மைசூரில் ஜஸ்ட் மிஸ்.. தப்பிய மொத்த குடும்பம்!

யானைகள்
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானை சுட்டித்தனங்களை கண்டு ரசிக்கும்படியே இருக்கும். அதே நேரத்தில் கோபம் கொண்டு விட்டால் அது எவ்வளவு பெரிய பொருளாக இருந்தாலும் நொடியில் தூக்கி கடாசி விட்டு சென்றுவிடுபவை மதம் பிடித்த யானைகள். இதுவரை யானை தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருந்தாலும் யானை மீதான கரிசனமும் பாசமும் பெரும்பாலானோருக்கு குறைந்தது கிடையாது.

குட்டி யானை வீடியோ
காரணம் அவற்றில் சுட்டித்தனங்கள் தான். அந்த வகையில் தான் தற்போது உலக அளவில் குட்டி யானை ஒன்று பிரபலமாகியுள்ளது. வனவிலங்கு சரணாலயத்திலிருந்து தவறி வந்த யானையை ஒரு சிறுமி காப்பாற்ற நன்றி உணர்வோடு அந்த சிறுமிக்கு யானை தனது துதிக்கையை உயர்த்தி நன்றி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

மீட்க உதவி
தாய்லாந்து நாட்டின் பாங்காங் அருகே உள்ள மிருகக்காட்சி சாலையில் இருந்து வழி தெரியாமல் வெளியே வந்த அந்த யானை குட்டி பல இடங்களில் சுற்றித்திரிந்து இருக்கிறது. கரும்பு தோட்டத்தை பார்த்து ஆசையாக அதனை சாப்பிடச் சென்றபோது அந்த குட்டி யானை சேற்றில் சிக்கி தவித்தது. இதை அடுத்து அவ்வழியாக வந்த பெண் ஒருவர் சேற்றில் சிக்கித் தவித்த யானையை மீட்க உதவி இருக்கிறார்.

துதிக்கையால் நன்றி
ஒரு வழியாக குட்டியானை சேற்றில் இருந்து வெளியே வந்த நிலையில் பயத்திலும் கூட தனக்கு உதவிய அந்த பெண்ணுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் வகையில் தனது துதிக்கையை உயர்த்தி நன்றி தெரிவித்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அந்த யானையின் பெயர் சுபன்ஷா என்பதும் சரணாலயத்தில் இருந்து தப்பி வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த யானை தற்போது மீட்கப்பட்டு மீண்டும் சரணாலயத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ தான் உலக அளவில் பிரபலமாகி வருகிறது.