"புதினை நம்ப முடியாது!" ரஷ்யா திடீரென பின்வாங்குவது இதற்கு தானா! அப்போ உக்ரைன் நிலை என்னவாகும்
கீவ்: உக்ரைனில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ள போதிலும், நடக்கும் நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாகவே உள்ளது.
Recommended Video
உக்ரைன் மீது கடந்த பிப். கடைசி வாரம் ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. இந்த போரில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மட்டுமின்றி பொதுமக்களும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,
இந்தச் சூழலில் இரு தரப்பிற்கும் இடையே கடந்த வாரம் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உக்ரைன் போர்
பேச்சுவார்த்தை சமயத்தில் கீவ் நகரைச் சுற்றியுள்ள ராணுவத்தைக் குறைக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்திருந்தது. போரின் முதற்கட்ட நோக்கங்கள் நிறைவேறிவிட்டதாகவும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும், தற்போது கிழக்கு உக்ரைன் பகுதியான டான்பாஸ் பகுதியில் கவனம் செலுத்தி வருவதாகவும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் ரஷ்ய ராணுவம் கீவ் அருகே செய்த போர் விதிமீறல்கள் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது.

ரஷ்யாவை நம்ப முடியாது
இதனால் தற்போதுள்ள சூழலில் ரஷ்யாவை நம்ப முடியாது என்றே வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் கீவ் நகரில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறுவது என்பது உக்ரைனை கைபற்றி, ஜெலன்ஸ்கி ஆட்சியை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து புதின் பின்வாங்கிவிட்டதையே காட்டுவதாக தி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச விவகாரங்களின் இணைப் பேராசிரியர் அலெக்சாண்டர் பி டவுன்ஸ் தெரிவித்தார். அதேநேரம் ரஷ்யா கூறும் அனைத்து உத்தரவாதங்களையும் அப்படியே நம்பிவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பொய்யான தகவல்கள்
இது தொடர்பாக அலெக்சாண்டர் பி டவுன்ஸ் மேலும் கூறுகையில், "பொதுவாகச் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் அளிக்கும் தகவல்கள் நம்பும்படி அமைந்து இருக்கும். இருப்பினும், தொடர்ந்து பொய்யான தகவல்களை மட்டுமே தெரிவிக்கும் ரஷ்ய மற்றும் அதன் தலைவர்கள் கூறும் கருத்துகள் நம்பும் வகையில் இல்லை. இன்னும் கூட உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றுவது அவர்களின் நோக்கமாக இருக்கலாம். யாருக்குத் தெரியும்.

தெளிவற்ற சமிக்ஞை
கீவ் நகரின் அருகே இருந்து ராணுவத்தின் ஒரு பகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளது, தெளிவற்ற சமிக்ஞையாகும் - ஒருவேளை அவர்கள் கிழக்கு உக்ரைனுக்கு அனுப்பப்படலாம், ஆனால் அவர்கள் அங்கு மீண்டும் கீலவ் நரை நோக்கித் திரும்ப வாய்ப்பில்லை என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. உக்ரைன் ராணுவத்தின் பலம் குறைக்கப்பட்ட பின்னர், ரஷ்யா தனது திட்டத்தை மாற்றி அமைக்கலாம்" என்றார்

இனப்படுகொலை
உக்ரைனின் கிழக்குப் பகுதிகள் ரஷ்ய மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த டோன்பாஸ் பகுதியில் ரஷ்ய மொழி பேசுபவர்களைக் குறி வைத்து இனப்படுகொலை நடைபெறுவதாகக் கூறி தான் ரஷ்யா இந்தப் போரை ஆரம்பித்தது. எனவே, ரஷ்யா இப்போது இந்தப் பகுதிகளில் தங்கள் கவனத்தைக் குவித்துள்ளன. கீவ் பகுதியில் ராணுவத்தைக் குறைப்போம் என ரஷ்யா கூறிய போதிலும், அதை அவர்கள் கடைப்பிடிப்பார்களே என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.

பெலராஸ் நாட்டில்
கீவ் பகுதியில் இருந்து வாபஸ் பெறப்பட்டுள்ள ஒரு பகுதியினர் பெலாரஸ் நாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எரிபொருள், ஆயுதங்கள் ஆகியவற்றை நிரப்பிக் கொண்டு மீண்டும் முழு வீச்சில் போரைத் தொடங்கும் வாய்ப்புகளும் அதிகம். இதை குறுகிய கால திட்டமாகக் கூட ரஷ்யா வைத்து இருக்கலாம் என ரஷ்யாவையும் புதினையும் நன்கு அறிந்த சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்கள்
ஏனென்றால் போரைத் தொடங்க மாட்டோம் எனப் பல வாரங்களாகத் தொடர்ந்து கூறிக் கொண்டே திடீரென ஒரு நாள் போரைத் தொடங்க உத்தரவிட்டவர் தான் ரஷ்ய அதிபர் புதின். எனவே, சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு மீண்டும் புதிய திட்டத்துடன் உக்ரைன் தலைநகரைத் தாக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி நடந்தால் அதில் ரஷ்யாவுக்கு எந்தளவு வெற்றி கிடைக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

என்ன நடக்கும்
பல வாரங்களாகப் போரிட்டு வரும் ரஷ்ய ராணுவம் ஏற்கனவே சோர்ந்து போயுள்ளனர். உக்ரைன் ராணுவம் இந்தளவு எதிர்ப்பை காட்டும் என ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. எனவே, ரஷ்யா மீண்டும் தலைநகரை நோக்கி முன்னேறினால், அதை எதிர்கொள்ளவும் உக்ரைன் தயாராகவே உள்ளது. ரஷ்யாவின் கடந்த கால டிராக் ரெக்காட்டுகளை பார்க்கும் போது, சொல்வது ஒன்று செய்வது ஒன்றுமாகவே உள்ளதால் ரஷ்யாவை நம்ப முடியாது என்றே எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications