சிக்னல் சேட் லீக் 2.O! ராணுவ ரகசியங்களை மனைவி, மக்களுடன் பகிர்ந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர்
வாஷிங்டன்: சிக்னல் எனும் மெசேஜிங் ஆப்பில் ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில் அவரது இரண்டாவது சேட் விவரங்கள் வெளியில் கசிந்திருக்கின்றன. இதில் தனது குடும்ப உறுப்பினர்களிடம் அவர் இதை பகிர்ந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க ராணுவம் திட்டம் தீட்டியிருந்தது. இது தொடர்பான தகவல்கள் சிக்னல் எனும் மெசேஜிங் ஆப்பில் பகிரப்பட்டது. வாட்ஸ் அப்பில் குரூப் உருவாக்குவோமே அதுபோல சிக்னல் செயலியிலும் குரூப் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உருவாக்கியிருக்கிறார்.
இதில் பலரும் உருப்பினராக இருந்திருக்கின்றனர். இந்த குரூப்பில் தெரியாமல் பத்திரிகையாளர் ஒருவரை யாரோ சேர்த்திருக்கிறார்கள். அவ்வளவுதான், அந்த பத்திரிகையாளர் சாட் அனைத்தையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து பொது வெளியில் அம்பலப்படுத்தியிருக்கிறார். இது அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பேசு பொருளானது. இந்த பஞ்சாயத்துக்கள் மீதான விவாதங்கள் பேசி ஓய்ந்த நிலையில், தற்போது புதிய பஞ்சாயத்து வெடித்து கிளம்பியுள்ளது.
அதாவது பீட் ஹெக்செத் இந்த ராணுவ ரகசியங்களை மற்றொரு குழுவிலும் பகிர்ந்து இருக்கிறார். 'Defense | Team Huddle' என பெயரிடப்பட்ட இந்த குழுவில் மொத்தம் 13 பேர் இருந்திருக்கின்றனர். இதில் ஹெக்செத்தின் மனைவியும் உறவினர்களும் இருந்திருக்கின்றனர். இவர் பகிர்ந்த தகவல்கள் உயர்மட்ட ராணுவ ரகசியமாகும். F/A-18 ஹார்னெட் விமானம் எந்த நேரத்தில் புறப்படும் என்பது உள்ளிட்ட விஷயங்களை இவர் குரூப்பில் ஷேர் செய்திருக்கிறார்.
ஆனால் வெள்ளை மாளிகை இதனை போலி குற்றச்சாட்டு என்று மறுத்திருக்கிறது. மறுபுறும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனை பூதாகரமாக வெடித்திருக்கிறது. அமைச்சர் பதவியிலிருந்து ஹெக்செத்தை நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் குரல் எழுப்பியுள்ளனர். விஷயம் கையை மீறி போவதை உணர்ந்த வெள்ளை மாளிகை சில அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு எளிதில் சமாதானமடையவில்லை.
உலகின் மிகவும் வலிமையான நாடு என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவில், இப்படியான ஆட்கள் பொறுப்புடன் இல்லாமல் அரச ரகசியங்களை பொது வெளியில் பகிர்ந்திருப்பது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications