ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபர் யார்? யார் இந்த அப்துல் கனி பரதர்.. அறிய வேண்டிய உண்மைகள்
காபூல் : தாலிபன் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தலிபான்கள் கைப்பற்றியபோது, ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று தாலிபன் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் பேசும் போது, இந்த மாபெரும் வெற்றிக்கு முஸ்லிம் ஆப்கானிஸ்தான் மக்களை வாழ்த்த விரும்புகிறேன் என்றார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடங்களாக அமெரிக்க ஆதரவு அரச படைகளுக்கும், அங்கு 2001க்கு முன்பு ஆட்சியில் இருந்த தாலிபன்களுக்கும் இடையே சண்டை நடந்து வந்தது

தாலிபன்கள் அறிவிப்பு
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை எந்த சண்டையுமின்றி கைப்பற்றியதால் கடந்த 20 வருடங்களாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகையை கைப்பற்றிய பின்னர், போர் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

ஓடிப்போன அஷ்ரப் கனி
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். இனி புதிய அதிபர் யார் என்ற கேள்வி எழுகிறது. ஆப்கானிஸ்தானில் அமையப் போகும் தாலிபன் அரசில் யார் அதிபர் என்ற கேள்விக்கான விடைகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. எனினும் தற்போதைய நிலையில் தாலிபன் இயக்கத்தின் இணை நிறுவனர் அப்துல் கனி பரதர் ஆப்கன் அதிபராக அதிக வாய்ப்பு உள்ளதாக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்க்கவில்லை
'நாங்கள் மிகவும் பின்னடைவான நிலையில் இருந்தோம். நாங்கள் வெற்றி பெறுவோம் அல்லது வெற்றி பெறுவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த மாபெரும் வெற்றிக்கு முஸ்லிம் ஆப்கானிஸ்தான் மக்களை வாழ்த்த விரும்புகிறேன்" என்று அப்துல் கனி பரதர் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிறையில் இருந்தவர்
சரி. யார் இந்த அப்துல் கனி பரதர் என்று விசாரித்தால் சில தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் உத்தரவின் பேரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பாகிஸ்தானில் உள்ள சிறைச்சாலையிலிருந்து அப்துல் கனி பரதர் விடுவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை, அவர் தோஹாவில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து தலைநகர் காபூலுக்குச் சென்றுள்ளார்.

ரஷ்யாவுடன் சண்டை
அப்துல் கனி பரதர் 1968 இல் உருஸ்கான் மாகாணத்தில் பிறந்தார். 1980 களில் சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீனாக போராடினார். 1992 ல் அமெரிக்க ஆதரவு பெற்ற ஆப்கான் முஜாஹிதீன்களால் ரஷ்யர்கள் வெளியேற்றப்பட்டனர். அப்போதைய ஜனாதிபதி முகமது நஜிபுல்லா, சோவியத் யூனியனின் ஆதரவை இழந்து, நடுநிலை இடைக்கால அரசாங்கத்திற்கு வழி செய்ய ராஜினாமா செய்தார். பல முஜாஹிதீன் கட்சிகள் தேசிய கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

முகமது உமர்
இருப்பினும், ஹெஸ்ப்-இ-இஸ்லாமி குல்புதீனுக்கு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவளித்தது. அவர் பேச்சுவார்த்தைக்கு பதிலாக, காபூலை மட்டும் கைப்பற்றுவதாக அறிவித்தார். இதன் விளைவாக நான்கு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்தது. இந்த நேரத்தில்தான் பரதர் மற்றும் அவரது மைத்துனர் முகமது உமர் ஆகியோர் தாலிபன் இயக்கத்தை நிறுவினர், ஷரியத் சட்டப்படி இஸ்லாமிய குடியரசு உருவாக்க வேண்டும் என்று இதை தொடங்கியிருக்கிறாரகள்.

உள்நாட்டு போர்
தாலிபன்கள் 1996 ஆம் ஆண்டில் வலிமையான சக்தியாக மாறினார்கள். இப்போது எப்படி ஆட்சியை கைப்பற்றினார்களோ அப்போது ஒரு மாகாணத்தை கைப்பற்றி ஆட்சிக்கு வந்தார்கள். முகமது ஒமரின் வெற்றிக்கு பின்புலமாக இருந்ததால் அப்போது பரதர், வெற்றிகளுக்குப் பாராட்டப்பட்டார். எனினும் செப்டம்பர் 1996 இல் தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றினார்கள். இது நாட்டை மற்றொரு உள்நாட்டுப் போருக்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக அமெரிக்க மற்றும் இங்கிலாந்து துருப்புக்களின் வருகைக்கு வழிவகுத்தது.

தாலிபன்கள் மீது போர்
1996-2001 ஆண்டுகளில், தாலிபான்களை எதிர்க்கும் ஒன்றுபட்ட இராணுவ முன்னணியாக இருந்த வடக்கு கூட்டணி. தாலிபான்களுக்கு எதிராக போரிட்டது. அவர்கள் முன்னாள் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானி மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அஹ்மத் ஷா மசூத் ஆகியோர் தலைமையில் போராடினார்கள் . இருப்பினும், 11 செப்டம்பர் 2001 உலக வர்த்தக மையத்தில் நடந்த தாக்குதலால் நேட்டோ படையினர் தலிபான்கள் மீது போரை அறிவித்தனர். அதன்பிறகு தாலிபன்கள் ஆட்சி வீழ்த்தப்பட்டது,

அமெரிக்கா உத்தரவு
இதனிடையே அப்துல் கனி பரதர் தாலிபன் படையின் தலைவராகவும் ஒரு அரசியல் இயக்க தலைவராகவும் செயல்பட்ட நிலையில் சிஐஏவினால் கராச்சியில் கண்காணிக்கப்பட்ட பிறகு, 2010 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அவரை கைது செய்தது. ஆனால் தோஹா ஒப்பந்தத்தின் பேரில் அமெரிக்கா போட்ட உத்தரவின் பேரில் கடந்த 2018ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். இப்போது அப்துல் கனி பரதர் ஆப்கன் அதிபர் மாளிகையை கைப்பற்றி உள்ளார்.

புதிய அதிபராக வாய்ப்பு
புதிய அதிபராக வாய்ப்பு உள்ள அப்துல் கனி பரதர் அண்மையில் கூறும் போது, நாங்கள் ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் மற்றும் அமெரிக்க படைகளுக்கு வேலை செய்தவர்கள், உதவியர்களை பழிவாங்க மாட்டோம். அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிப்போம். மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம். பெண்களுக்கு கல்வி , அரசியலில் முக்கியத்துவம் கொடுப்போம் என்றார். எனவே இந்த உறுதியை அவர் நிறைவேற்றுவார என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,.












Click it and Unblock the Notifications