ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO... புதிய வார்னிங்
ஜெனீவா: உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு மீண்டும் உச்சமடைந்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவி வருவதால், நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஓமிக்ரான் கொரோனா பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், ஓமிக்ரானால் பாதிக்கப்படுவோருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கூட, சுனாமி போன்ற கேஸ்களை ஏற்படுத்தக் கூடிய ஓமிக்ரான் பரவலை லேசானதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஏன் பரவுகிறது
இந்நிலையில், ஓமிக்ரான் ஏன் இப்படி மின்னல் வேகத்தில் பரவுகிறது என்பது குறித்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு பகிர்ந்து கொண்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் கோவிட்-19 தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், "ஓமிக்ரான் கொரோனா மிக வேகமாகப் பரவக்கூடியது. எனவே, பொதுமக்கள் எளிதாக வைரசை தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மனித செல்கள்
ஓமிக்ரான் மிக வேகமாக மக்களிடையே பரவ பல்வேறு காரணங்கள் உள்ளன. முதலாவதாக உருமாறிய கொரோனா என்பது எளிதாக மனித செல்களில் நுழையும் வாய்ப்பு கொண்டிருக்கிறது. இரண்டாவதாக, உருமாறிய கொரோனா நோயெதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். அதாவது ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு அல்லது வேக்சின் போட்டுக் கொண்ட ஒருவருக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்படலாம்,

முக்கிய காரணம்
மற்றொரு முக்கிய காரணம் என்னவென்றால், மேல் சுவாசக் குழாயில் ஓமிக்ரானின் பரவல் டெல்டா மற்றும் பிற வகைகளிலிருந்து மாறுபட்டு உள்ளது. கீழ் சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில் பகுதிகளிலும் ஓமிக்ரான் பரவல் வேறுபட்டே உள்ளது. இதுபோல பல்வேறு காரணங்களால் தான் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. ஆனால், இதையெல்லாம் விட ஒரு முக்கிய காரணம் உள்ளது. அது பொதுமக்களின் செயல்பாடுகள்.

நமது செயல்பாடுகள்
கடந்த காலங்களில் பொதுமக்கள் அதிகம் வீடுகளில் இருந்தே வேலை செய்து வந்தனர். ஆனால், இப்போது மக்கள் இப்போது அதிகம் வீடுகளை விட்டு வெளியே வந்து வருகின்றனர். அப்போது கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாமல் ஒரே இடத்தில் மக்கள் ஒன்றுகூடும் சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாகவும் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது.

நீண்டகால பாதிப்பு
மேலும் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சில நீண்டகால பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் பொதுமக்கள் கொரோனா பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகெங்கும் சுமார் 95 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் 71% அதிகமாகும். இதன் காரணமாகவே உலக சுகாதார அமைப்பு தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications