சாதிய பாகுபாடு.. தேசிய கொடியேற்ற விடாமல் பட்டியலின ஊராட்சி தலைவரை தடுத்த கும்பல்.. போலீசில் புகார்!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்புக்குழி ஊராட்சியின் அரசுப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், பட்டியலின ஊராட்சி தலைவரை தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னதாக குடியரசு தின விழாவில் பட்டியலின தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி இருந்தார்.
அதேபோல் மாவட்ட ஆட்சியர்கள் 15 இனங்கள் தொடர்பாக தொடர் நடவடிக்கை எடுத்து எந்த வித புகார்களும் இன்றி வரும் 26ம் தேதி குடியரசு தினவிழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

காஞ்சிபுரம் ஊராட்சி
இதன் காரணமாக பெரும்பாலான ஊராட்சிகளில் பட்டியலின தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிய நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புக்குழி ஊராட்சியில் மட்டும் ஊராட்சி தலைவரை தேசிய கொடியை ஏற்றவிடாமல் தடுக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா தேவேந்திரன். இவர் திருப்புக்குழி ஊராட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

தேசிய கொடி ஏற்ற எதிர்ப்பு
இந்த நிலையில் திருப்புக்குழி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசிய கொடி ஏற்ற அப்பள்ளியின் தலைமையாசிரியர் சுகுணா தேவேந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று, ஊராட்சி தலைவர் சுகுணா தேவேந்திரன் அப்பள்ளிக்கு சென்ற போது, திடீரென 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. தொடர்ந்து, தேசிய கொடியை ஏற்ற விடாமல் தகாத வார்த்தைகளால் ஊராட்சி தலைவரை திட்டிய அந்த கும்பல், கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.

திமுக நிர்வாகி
இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுகுணா தேவேந்திரன் பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மிரட்டலில் ஈடுபட்டது பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகியும், திமுகவைச் சேர்ந்தவருமான பாலசந்தர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடந்த ஆண்டு நடந்த குடியரசு தின விழாவிலும் பிரச்சினையை ஏற்படுத்தி இருந்துள்ளார்.

சாதிய பாகுபாடு
இதுகுறித்து ஊராட்சி தலைவர் சுகுணா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று தேசியக் கொடி ஏற்ற முயன்ற போது, சிலர் எனக்கு எதிராக தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர். திடீரென பிரச்சினை வந்ததால், தலைமையாசிரியர் என்னை கொடியேற்ற வேண்டாம் என்று கூறினார். குறிப்பாக திமுகவைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் செய்த பிரச்சினையால் கொடியேற்ற விடவில்லை. தலைமையாசிரியர் என்னை தேசிய கொடி ஏற்ற அழைத்துவிட்டு, தற்போது தடுத்து நிறுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications