அப்பவே 27 பேரை "காவு" வாங்கிய துறைமுகம்! இப்போதும் ஒருவர் மாயம்! என்ன நடக்குது தேங்காப்பட்டணத்தில்?
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தையொடியுள்ள தேங்காய் பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிக்க கட்டுமரத்தில் புறப்பட்ட மீனவர் ஒருவர் மாயமாகியுள்ளார்.
ஏற்கெனவே இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது மீனவர் ஒருவர் மாயமாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஆறும் கடலும் இணையும் பகுதி இது என்பதால் இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள மீன் பிடி துறைமுகத்தை இது போன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு மறு கட்டமைப்பு செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிதொழில் பிரதானமானதாகும். இந்த தொழில் மாவட்டத்தின் வருவாயில் பெரும் பங்காற்றுகிறது. இந்நிலையில், மார்த்தாண்டத்தையொட்டியுள்ள தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மீனவர்களின் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் மேம்படுத்தப்பட்டது. ஆனால் ஆறும், கடலும் சேரும் இடமான இங்கு தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்தவண்ணமுள்ளன. இங்கிருந்து படகை கடலுக்குள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த துறைமுகத்தை மையமாக கொண்டு சுமார், 9,000 ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகளும், 5,000க்கும் அதிகமான பைபர் படகுகளிலும் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிருந்து படகை ஆழ்கடலுக்குள் செலுத்தும் போது அலைகளின் தாக்கத்தால் படகு கடலில் உள்ள மணல் திட்டுக்களில் சிக்கிக்கொள்கிறது. இதனால் படகை திரும்பவும் மீட்க முடியாமல் இன்ஜின் பழுதடைந்து விடுவதாக அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் தொடர் சிக்கல்கள் மேலெழுந்துள்ளதாகவும் எனவே இந்த துறைமுகத்தை மீறு சீரமைத்து கொடுக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, இன்று மேலும் ஒரு விபத்து நடந்துள்ளது. இரவி புத்தன் துறையை சேர்ந்த அமல்ராஜ் எனும் மீனவர் ஒருவர் கட்டுமரத்தில் மீன் பிடிக்க கடலுக்கு சென்று திரும்பியுள்ளார். இவ்வாறு திரும்பும்போது, அலையில் சிக்கிய அவர் மாயமாகியுள்ளார்.
ஏற்கெனவே இப்பகுதியில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டு 27 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் மாயமாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தலைமையில் எம்எல்ஏ ராஜேஷ்குமார், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தூத்தூர் மண்டல பாதிரியார் பெபின்சன் உள்ளிட்டோர் இந்த துறைமுகத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்திருந்தனர்.
முதலமைச்சரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
