உண்மையான வரலாற்றை அழிச்சிட்டாங்க.. நம் நாடு ஆன்மீக பூமி.. எதிர்ப்புகள் கிளம்பினாலும் விடாத ஆளுநர்!
கன்னியாகுமரி : மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு வரலாற்றை கூறியிருக்கின்றனர். இந்தியாவின் உண்மையான வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
மேலும், இந்தியாவை உலக நாடுகள் உன்னிப்பாக பார்த்து வருகிறது என்றும், 2047ல் நாம் வளர்ச்சி அடைந்து விடுவோம் என்று பிரதமர் மோடி கூறியதையும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்மீகம், இந்து மதம், சனாதனம் பற்றி தொடர்ந்து பேசி வருவது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் மீண்டும் ஆன்மீகம் பற்றிப் பேசியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாளை கொண்டாடும் வகையில் நாகர்கோவில் அருகே இறைச்சகுளம் பகுதியில் பாரதி இதிகாச சங்கலன சமிதி அமைப்பு சார்பில் நேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.

திருவிழா - ஆளுநர் பேச்சு
அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து பல பகுதிகள் பிரிந்து சென்ற நிலையில் கேரளாவில் இருந்து தமிழ் மொழி பேசும் மக்கள் தமிழகத்தோடு இணைந்ததை நினைவு கூறும் வகையில் குமரி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சர்தார் வல்லபாய் படேலை நான் நினைவுகூர கடமைப்பட்டுள்ளேன். இந்நாளை நாம் திருவிழாவாக கொண்டாட வேண்டும். இந்த நாளில் நமக்காக பாடுபட்ட மக்களை நாம் எண்ணி பார்க்க வேண்டும்.

பாரத மாதாவின் துவக்கம்
சுதந்திர போரில் ரத்தம் சிந்திய மக்களை எண்ணி பார்க்க வேண்டும். நீண்ட நெடிய வரலாறு கொண்ட இந்திய மக்கள் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் ஒரு புண்ணிய பூமி. ஆதி பராசக்தி தோன்றிய பூமி பாரத மாதாவின் துவக்கம் இங்கிருந்து துவங்குகிறது. எதற்காக நாம் இந்திய வரலாற்றை எழுத வேண்டும் என சிந்தியுங்கள். வெளிநாட்டவர் உருவாக்கிய வழியில் படித்தோம்.

இந்திய வரலாறை மறைத்துவிட்டனர்
நம்முடைய கலாசாரமும், வரலாறும் வெளிநாட்டவர்கள் சொல்லித்தான் நமக்கு தெரிகிறது. மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்கள் நம் நாட்டின் உண்மையான வரலாற்றை அழித்துவிட்டு, மேற்கத்திய கண்ணோட்டத்தோடு வரலாற்றை கூறியிருக்கின்றனர். நம் நாட்டின் ஆன்மீகத்தை அழிக்கும் வகையிலும், கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும் வரலாற்றை எழுதியிருக்கின்றனர். இந்திய வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்டு உள்ளது. இதனை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

காந்தி சொன்னதை மறக்கக் கூடாது
சுதந்திரம் கிடைத்தபோது மகாத்மா காந்தி கூறியதை நாம் மறக்கக்கூடாது. ஆங்கிலேயர்கள் வெளியே சென்று இருக்கலாம். ஆனால், அவர்கள் நம் எண்ணத்தில் இருந்து மறைய 100 ஆண்டுகளாவது ஆகும். அவர்கள் விட்டுச்சென்ற பிளவுபடுத்தும் சிந்தனைகள் மறைய 100 ஆண்டுகள் ஆகும் என்றார் காந்தி.

வரலாற்றை மாற்றி எழுதிவிட்டார்கள்
நம் நாட்டுக்கு வெளிநாட்டவர்கள் வருவதற்கு முன்பு இந்தியா உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடத்தில் இருந்தது. உலக பொருளாதாரத்தில் 30 சதவிகித பொருளாதாரம் நம் நாட்டில்தான் இருந்தது. பிரெஞ்சுகாரர்கள், பிரிட்டீஷ்காரர்கள் உள்ளிட்டோர் 150 ஆண்டுகளாக கம்பெனி நடத்தி இங்கிருந்து பொருளாதாரத்தை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இதற்கு முன்பு பலரும் நம்மை ஆண்டார்கள், ஆனால் மேற்கத்தியர்கள் வந்த பிறகுதான் நம் பொருளாதாரம் கொள்ளையடிக்கப்பட்டது. நம் வரலாறு மாற்றி எழுதப்பட்டது, கலாசாரம் தவறாக பரப்பப்பட்டது.

உன்னிப்பாக கவனிக்கும் உலக நாடுகள்
இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 2047 ல் நாம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து விடுவோம் என பிரதமர் கூறியுள்ளார். இதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிகவும் முக்கியம். வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் நாட்டின் பலம். ஆனால் வேற்றுமையை மேற்கத்தியர்கள் பிரிவினையாக சித்தரித்துவிட்டனர்.

இலைகள் பல - மரம் ஒன்று தான்
இந்தியாவில் பல மொழிகள் மற்றும் கலாச்சாரம் உள்ளது. பாரதம் என்றால் ஆன்மீகம், கலாசாரம் நிறைந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. ஆனால் வேற்றுமை என்பது மரத்தின் இலைகள் போன்றது ஆயிரக்கணக்கில் இருக்கலாம். ஆனால், மரம் என்பது ஒன்று தான். அது போல் தான் இந்தியாவும் ஒன்று தான். நமது மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் நம்பிக்கை உள்ளது. அவர்களால் இந்தியா நிச்சயம் உன்னதமான நிலையை அடையும்." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications