கரூரில் புதிய மின் இணைப்பு கேட்ட சரவணன்! பதிலுக்கு ரூ 4000 லஞ்சம் வாங்கிய போர்மேன் அக்னீஸ்வரன் கைது
கரூர்: கரூரில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய போர்மேனை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியில் மின் வாரியத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கரூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள அலுவலகத்தில் போர்மேனாகப் பணியாற்றி வரும் அக்னீஸ்வரன் (45) என்பவர் சரவணனிடம் ரூ.4,000 லஞ்சமாகக் கேட்டுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜான் தலைமையில் சுமார் 8 பேர் கொண்ட போலீசார் குழுவினர் ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ.4,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் போர்மேன் அக்னீஸ்வரனை போலீசார் அதே இடத்திலேயே பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு, லஞ்சப் பணம் தொடர்பாகவும் போலீசார் ஆய்வு செய்தனர்.
புதிய மின் இணைப்பு பெறுவதற்காக வந்த நபரிடம் மின்வாரிய ஊழியர் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்று போர்மேனை கைது செய்திருப்பது கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டதாக உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் கைது செய்தனர்.
அது போல் மதுரை அருகே நிலப்பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்த முதியவரிடம் ரூ 3000 லஞ்சம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) மற்றும் அவரது உதவியாளர் இழுத்தடித்தனராம். இதையடுத்து புகாரின் பேரில் விஏஓ-வை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.


Click it and Unblock the Notifications
