ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டு சென்ற 12 வயது சிறுவனை காணவில்லை! டியூஷன் சென்ற போது கடத்தலா?
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே லிப்ட் கேட்டுச் சென்ற 12 வயது பள்ளி மாணவன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே செஞ்சி, ஸ்ரீபெரும்புதூரில் 7 வயது, 8 வயது சிறுமிகள், ராணிப்பேட்டை அருகே ஒரு வயது குழந்தை என குழந்தைகள் காணாமல் போனது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் பேக்கரி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகன் சஞ்சய். 12 வயதான இவர் ஊத்தங்கரை அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற சஞ்சய் மாலை வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் வீட்டிலிருந்து டியூஷன் செல்வதாக கூறி சென்ற சிறுவன் சஞ்சய், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிங்காரபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்டமாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சிறுவன் சஞ்சய் அந்த வழியாக வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்பதும் பின்னர் இரு சக்கர வாகனத்தில் ஒருவருடன் செல்வதும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கிறது.
சிசிடிவி கேமராக்கள்
தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். 12 வயது சிறுவன் லிப்ட் கேட்ட போது யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான புகாரில் 12 நாட்களுக்கு மேலாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவன் ஒருவன் லிப்ட் கேட்டுச் சென்று மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செஞ்சி சம்பவம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா (7)காணாமல் போனார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 12 நாட்களாகியும் சிறுமியின் நிலை தெரியவில்லை.
ஸ்ரீபெரும்புதூர் சிறுமி
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் அருகே கருமாங்கழனி கிராமத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கல்பனா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு கல்பனா தனது சொந்த மாநிலமான ஜார்க்கண்டிற்கு சென்றுள்ளார். இதனால் சிறுமி பக்கத்து வீட்டில் இருந்த நிலையில் திடீரென காணவில்லை.
ராணிப்பேட்டை குழந்தை
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அருகே சாலையோரத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 1 வயது பெண் குழந்தையை காணவில்லை. அது போல் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை அடுத்த குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் நேற்று முதல் காணவில்லை. இப்படியாக ஒரே மாதத்தில் 4 சிறுவர்கள் + 1 குழந்தை மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




Click it and Unblock the Notifications
