பெண் போலீசிடம் தப்பா நடந்துகிட்டாரு.. எனவேதான் வாலிபரை பூட்ஸ் காலால் உதைத்தேன்: கிருஷ்ணகிரி எஸ்.பி.
ஓசூர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞரை பூட்ஸ் காலால் எட்டி உதைக்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது என்று கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி: ஓசூர் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், லத்தியால் தாக்கி, பூட்ஸ் காலால் உதைப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் இளைஞரிடம் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று கிருஷ்ணகிரி எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக எருதுவிடும் விழா நடத்தப்படுவது உண்டு.
அந்த வகையில், இந்த ஆண்டும் பல்வேறு இடங்களில் எருதுவிடும் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் 17, 18-ந் தேதிகளில் வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி பகுதிகளில் நடந்த எருதுவிடும் விழாக்களில் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படாத காரணத்தால் சிறுவன் உள்பட 3 பேர் மாடு முட்டி இறந்தனர்.

அனுமதி கேட்டு விண்ணப்பம்
இதன் காரணமாக அதிகாரிகள் எருதுவிடும் விழாவுக்கான விதிமுறைகளை கடுமையாக்கியதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருதுவிடும் விழா நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான அனுமதி நேற்று முன்தினம் அரசிதழில் வெளியானது. எனினும், கால்நடை பராமரிப்பு துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சார துறை, தீயணைப்பு துறையினர் கூட்டு புல தணிக்கை செய்து அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நெடுஞ்சாலையில் போராட்டம்
விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்த நிலையில், கூட்டு புல தணிக்கை இன்னும் நடத்தப்படவில்லை என்றும், ஆய்வு செய்த பின்னரே விழா நடத்த அனுமதிக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக எருது விடும் விழா தொடங்கவில்லை. விழா தொடங்க தாமதம் ஆனதால் ஆத்திரம் அடைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென ஓசூர் அருகே கோபசந்திரம் தட்சிணதிருப்பதி கோவில் பிரிவு சாலை கிருஷ்ணகிரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். தொடர்ந்து அங்கு பெரும் போராட்டம் வெடித்தது.

பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சி
எருது விடும் விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்த போதிலும் இதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள் ஏற்கனவே 2 முறை அனுமதி தருவது போல் கூறிவிட்டு பின்னர் விழா நிறுத்தப்பட்டதாகவும், தற்போதும் அதேபோல் கூறுகிறீர்கள் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தால் பெங்களூரு - கிருஷ்ணகிரி சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது கைது செய்யப்பட்ட இளைஞரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர், லத்தியால் தாக்கி, பூட்ஸ் காலால் உதைப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இளைஞர் தப்பிக்க முயன்றதால்..
சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோ பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்து ஏன்? என்பது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி சரோஜ் குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி எஸ்.பி கூறுகையில், "பெண் காவலரிடம் தகாத முறையில் இளைஞர் நடந்ததால் அப்படி நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விசாரணையின் போது இளைஞர் தப்பிக்க முயன்றதால் பூட்ஸ் காலால் உதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications