லிஸ் ட்ரசுக்கு பதில் பிரிட்டன் பிரதமராகும் ரிஷி சுனக்? பொருளாதார நெருக்கடியால் மாறும் அரசியல் களம்
லண்டன்: பிரிட்டனில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஒரு பகுதியினர் தற்போதைய பிரதமர் லிஸ் ட்ரஸை நீக்கவிட்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கை பிரதமராக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையில் நாட்டின் பொருளாதார நிலையும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சரான ரிஷி சுனக் உள்பட ஏராளமானவர்கள் போட்டியிட்டனர்.

ரிஷி சுனக் தோல்வி
பிரிட்டன் நடைமுறைப்படி பல கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இறுதி போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் இருந்தனர். இதில் ரிஷி சுனக் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், லிஸ் ட்ரஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். கருத்து கணிப்புகள் துவக்கத்தில் ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக இருந்த நிலையில் இறுதியில் மாறியது. இந்த தேர்தலில் ரிஷி சுனக் தோல்வியடைவார் என்ற தகவல்கள் வெளியாகின.

பிரதமரான லிஸ் ட்ரஸ்
அதன்படி பிரிட்டன் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரசுக்கு ஏராளமானவர்கள் ஓட்டளித்தனர். செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். ரிஷி சுனக் தோல்வியடைந்தார். இதன்மூலம் பிரிட்டனின் 3வது பெண் பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்றார். இவர் 2025 வரை பதவியில் இருப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது பிரிட்டன் அரசியலில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலை
இதற்கு காரணம் பிரிட்டனின் பொருளாதார மந்த நிலை தான். லிஸ் ட்ரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் பணவீக்கத்தை குறைந்து, மக்கள் பயன்பெறும் வகையில் பொருளாதார திட்டங்கள் வகுக்கப்படும் என அறிவித்தார். இந்த வாக்குறுதி கைக்கொடுத்த நிலையில் அவர் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக தான் சமீபத்தில் பிரதமர் லிஸ் டிரஸ்சின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு நிகரான உள்ளூர் கரண்சி பவுண்டின் விலை வீழ்ச்சி அடைந்தது. மேலும் கடன் விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பிரிட்டனின் பொருளாதார நிலை என்பது பெரும் பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை சந்தித்தது.

நிதி அமைச்சர் நீக்கம்
இந்நிலையில் உரிய வகையில் பட்ஜெட் திட்டம் தீட்டாமல் இருந்ததாக குற்றம்சாட்டி நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதில் இருந்து பிரதமர் லிஸ் டிரஸ் நீக்கியுள்ளார். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்மி ஹன்டை புதிய நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்கள் வரி குறைப்பு பொருளாதார கொள்கைகயை கடுமையாக எதிர்த்துள்ளனர். இது பெரும்பணக்காரர்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்பதால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஒரு தரப்பு பிரதமர் லிஸ் ட்ரசுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை கைவிடப்படுவதாக பிரதமர் லிஸ் டிரஸ் அறிவித்துள்ளார்.

கட்சிக்குள் வெடித்த அதிருப்தி
பதவியேற்ற சிறிது நாட்களிலேயே பொருளாதாரம் சார்ந்த தடுமாற்றம் என்பது பிரதமர் லிஸ் ட்ரஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்கள் பலர் பிரதமர் லிஸ் ட்ரஸின் செயல்பாட்டை விரும்பவில்லை. இதனால் அவரை பிரதமர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு அவருக்கு பதிலாக பென்னி மோர்டான்ட் மற்றும் ரிஷி சுனக் ஆகியோரின் கூட்டாச்சியை கொண்டு வரும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டன் அரசியலில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதி பேர் ரிஷி சுனக்கிற்கு ஆதரவு
மேலும் தற்போதைய நிலையில் கட்சியை சேர்ந்த பாதி பேரில் தாங்கள் தவறான நபரை பிரிட்டன் பிரதமராக தேர்வு செய்வதாக கூறி வருவதாகவும் கூறப்படுகிறது என ‛தி டைம்ஸ்' பத்திரிக்கைக்காக யூகோவ் நடத்திய கருத்து கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. மேலும் பலரும் பென்னி மோர்டான்ட் கட்சி தலைவராகவும், பிரதமராக ரிஷி சுனக்கை கொண்டு வரவும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரிட்டன் அரசியலில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.

போரிஸ் ஆதரவு எம்பி கண்டனம்
இதற்கிடையே இந்த தகவலை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ஆதரவு எம்பியான நாடின் டோரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "லிஸ் ட்ரஸை நீக்கக் கோரி போராட்டம் நடத்தும் எம்பிக்கள் அனைவரும் ரிஷி சுனக்கின் ஆதரவாளர்கள். இவர்கள் தான் போரிஸ் ஜான்சனை பதவியில் இருந்து நீக்க போர்க்கொடி தூக்கினர். இப்போதும் சதி திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு பிரதமரை அகற்றுவதற்கான சதி அல்ல. மாறாக ஜனநாயகத்தை கவிழ்ப்பதற்கான சதி'' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications