அப்போது செல்போன் உரையாடல்.. இப்போது குழந்தைகளின் இன்ஸ்டா கணக்கு ஹேக்?? பிரியங்கா காந்தி பரபர புகார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றனர்.
அடுத்தாண்டு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை 2024 மக்களவை தேர்தலுக்கான காலிறுதி என்று கூட சில தேர்தல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதற்காக அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசம் மீது தான் அனைவரது கவனமும் குவிந்துள்ளது.

கடும் போட்டி
இந்த முறை உத்தரப் பிரதேசத்தில் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட ஏற்கனவே கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே உத்தரப் பிரதேசத்தில் முகாமிட தொடங்கியுள்ளனர்.

குழந்தைகளின் கணக்குகள்
அதேபோல மற்ற கட்சிகளும் தேர்தல் முன்வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் யோகி ஆத்தியநாத் தலைமையிலான உபி அரசு மீதும் சில பகீர் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் சுமத்தி வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.

செல்போன் ஒட்டுக்கேட்பு
முன்னதாக கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது மொபைல்போன்களை உபி அரசு ஒட்டுக்கேட்பதாகப் பரபர குற்றச்சாட்டைச் சுமத்தியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "எங்களுடைய எல்லா போன்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன, எங்கள் உரையாடல்கள் பதிவு செய்யப்படுகின்றன, கட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து தொலைப்பேசிகளும் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.

முதல்வர் பதிலடி
குறிப்பாக முதல்வரே எங்களின் சில ஃபோன் ரேக்காட்டிங்களை கேட்கிறார், எங்களைத் தொடர்பு கொள்ளும் அனைவரது ஃபோன்கால்களையும் அவர் கேட்டே வருகின்றனர்" என்றார். இதை முற்றும் மறுத்த முதல்வர் யோகி ஆத்தியநாத், "அநேகமாக அகிலேஷ் ஆட்சியில் இருந்தபோது இதேபோன்ற செயலைச் செய்திருக்கலாம். அதனால், அவர் மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறார்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பெண்களை முன்னிறுத்தும் பிரியங்கா
இப்படி அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதேநேரம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பெண்களை முன்னிறுத்து அரசியல் செய்து வருகிறார். சமீபத்தில். பேரணி ஒன்றில் பேசிய பிரியங்கா காந்தி, "பிரதமர் மோடி பெண்கள் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துவதாகக் கூறியுள்ளார். இது உத்தரப்பிரதேச பெண்களின் வெற்றி. நாட்டின் மிகப் பெரிய சக்திக்கு முன் அவர் பணிந்துள்ளார். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி
உபி தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில வாரங்களில் மட்டும் பல முறை அங்குச் சென்று, பல முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்துவருகிறார். கடந்த வாரம் உத்தரப் பிரதேசம் சென்ற பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட பல புதிய திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார்..












Click it and Unblock the Notifications