பாம்பை கழுத்தில் மாலை போல போட்டுக்கொண்டு ஊர்வலம்.. கெத்து காட்டி உயிரைவிட்ட நபர்.. பரவும் வீடியோ!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாம்பை தோளில் மாலை போல போட்டுக்கொண்டு ஊர்வலம் வந்த நபரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், பாம்பு கடித்ததால் சில மணி நேரங்களில் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள ஷஹஜான்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திர மிஸ்ரா.
பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான இவரை சுற்றுவட்டாரத்தில் தெரியாதவர்களே இல்லை எனலாம்.
இன்று முதல் தமிழகத்தில் 5 நாட்கள் கொட்டப்போகும் கன மழை - சென்னைக்கும் சேர்த்துதான் வார்னிங்!

பாம்பு பிடி வீரர்
எந்த ஊரில் பாம்பை மக்கள் கண்டாலும் முதலில் இவருக்குதான் அழைப்பு வரும். இவரும் துளியும் பயம் இன்றி துணிச்சலாக பாம்பை லாவகமாக பிடித்து விடுவார். இந்த நிலையில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாக தேவேந்திர மிஸ்ராவுக்கு அழைப்பு வந்தது. உடனே புறப்பட்ட தேவேந்திர மிஸ்ரா குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று பாம்பு எங்கே இருக்கிறது என கேட்டார். அவர்கள் இத்திசையில் தான் சென்றது என கைகாட்ட.. அடுத்த சில நிமிடங்களில் அவர் பாம்பை கண்டுபிடித்தார்.

மிகவும் தைரியமானவர்
தொடர்ந்து எந்தவித சித்ரவதையும் செய்யாமல், கம்பினால் அடிக்காமல் சில நிமிடங்களில் பாம்பை லாவகமாக உயிருடன் பத்திரமாக மீட்டார். பாம்பை பிடித்ததும் வனத்திற்குள் விடாமல் தேவேந்திர மிஸ்ரா செய்த முட்டாள்தனமான செயல் அவருக்கே எமனாகியிருக்கிறது. பாம்பை பிடித்த மிஸ்ரா, ஊர் மக்கள் மத்தியில் தான் மிகவும் தைரியமானவன் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாரோ?.. என்னவோ...கடைசியில் அவரது உயிருக்கே ஆபத்தாய் முடிந்தது.

கழுத்தில் மாலை போல போட்டுக்கொண்டு
தேவேந்திர மிஸ்ரா உயிருடன் பிடித்த பாம்பை தனது கழுத்தில் மாலை போல போட்டுக்கொண்டு கெத்தாக நடந்து சென்றுள்ளார். 'என்னை போல் வீரன் ஒருவனும் அல்ல.. என்று கூறிக்க்கொள்ளும் விதத்தில்' அவர் நடைபோட்டு கொண்டிருந்தார். ஆனால் அவரது 'மைண்ட் வாய்ஸ் பாம்புக்கு கேட்டதோ என்னவோ தெரியவில்லை' திடீரென எழுந்த பாம்பு தேவேந்திர மிஸ்ராவை கடித்து விட்டது. அந்த பாம்பு கொடிய விஷம் கொண்டதாக இருந்ததால், அவருக்கு உடனடியாக விஷம் ஏறியது. இதனால் தேவேந்திர மிஸ்ரா பதறிப்போனார்.

தீயாக பரவும் வீடியோ
ஆனாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் தனக்கு தெரிந்த மூலிகைகளை கொண்டு பாம்புக்கடி விஷத்திற்கு வைத்தியம் பார்த்துள்ளார். இந்த நிலையில், சில மணி நேரங்களில் தேவேந்திர மிஸ்ரா உயிரிழந்தார். பாம்பை தேவேந்திர மிஸ்ரா கழுத்தில் சுற்றிக்கொண்டு நடந்து செல்லும் காட்சிகளை அங்கிருந்த மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் தீயாக பரவி வருகிறது.

விமர்சிப்பு
இந்த வீடியோவில், குச்சியின் உதவியால் பாம்பை லாவகமாக பிடிக்கும் தேவேந்திர மிஸ்ரா பிறகு அதை தனது கழுத்தில் சுற்றியபடி வலம் வருகிறார். நெட்டிசன்களை பதற வைத்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கெத்து காட்டுவதாக நினைத்து முட்டாள்தனமாக பாம்பிடம் கடி வாங்கி உயிரை விட்டிருக்கிறாரே? என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.