எல்லாமே பொய்..தர்மத்தின் பெயரில் அல்ல..பொய்களை சொல்லி வாக்கு கேட்கும் பிரதமர்..விளாசிய ராகுல்காந்தி
லக்னோ : பிரதமர் நரேந்திர மோடி தர்மத்தின் பெயரால் அல்லாமல் பொய்களின் அடிப்படையில் வாக்குகளை கேட்பதாகவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்த வாக்குறுதிகள் பற்றி அவர் பேசுவதே இல்லை என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் அசம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம்.

உ.பி.தேர்தல்
மாநிலத்தில் ஏழாவது கட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் உத்திர பிரதேச தேர்தலில் தனித்தனியாக பலப் பரிட்சை நடத்துகின்றன. இதற்காக பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் வாரணாசிக்கு வந்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் காசி விஸ்வநாதர் கோவிலில் பிரார்த்தனை செய்தனர். சில மணி நேரம் கழித்து, பிரதமர் நரேந்திர மோடியும் அதே சிவன் கோவிலுக்குச் சென்றார். முன்னதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவிலுக்கு வந்தார்.

காங்கிரஸின் ராகுல்காந்தி
தொடர்ந்து நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி "பொய்களின்" அடிப்படையில் வாக்குகளைக் கோருகிறார், மேலும் அவர் இப்போது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது மற்றும் வேலைகளை உருவாக்குவது போன்ற வாக்குறுதிகளைப் பற்றி பேசவில்லை என்று கூறினார். "இந்து மத புத்தகங்கள் எங்கும் பொய் பேசவில்லை" என்று கூறிய அவர், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும் தனது முந்தைய தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி இப்போது பேசவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

கடும் விமர்சனம்
சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசாங்கம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையான ₹ 2,500 ஒரு குவிண்டாலுக்கு நெல் கொள்முதல் செய்ததற்கான உதாரணத்தை மேற்கோள் காட்டிய ராகுல்காந்தி, "தர்மத்தின் பெயரால் அல்ல, மாறாக அவர் பொய்களின் அடிப்படையில் வாக்குகளை கேட்கிறார் என்றார். உண்மையில் அவரது 'இரட்டை இயந்திரம்' 'அதானி மற்றும் அம்பானி' எனவும், இந்த வகையான இரட்டை இயந்திரம் ஒருபோதும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியாது என்றார்.

கொரோனா பாதிப்பு
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் இந்திய அரசாங்கத்திடம் இருந்து "உதவி இல்லாத நிலையில்" அவர்களின் வேதனையான நிலையை வீடியோக்களை அனுப்பும்போது, பாஜக தலைவர்கள் "தோல்வியடைந்த மாணவர்களின் வீடியோக்களை பேசுகிறார்கள் என கூறிய ராகுல்காந்தி, "கொரோனா வைரஸை விரட்டியடிக்க பாத்திரங்களை தட்டும்படி மக்களைக் கேட்ட உலகின் ஒரே தலைவர் எங்களிடம் இருக்கிறார்" என்று பிரதமர் மோடியை குறிவைத்து அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications