லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு அக்னி பரீட்சையாக உ.பி.தேர்தல் களம்- அதிருப்தி அலைக்கு மத்தியில் காவி கொடி பறக்குமா?

Google Oneindia Tamil News

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும்... பாஜக வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்... ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலையை எதிர்கொண்டு வென்றாக வேண்டும் என்கிற ஒருவித இழுபறியான கருத்துகளே அரசியல் வல்லுநர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 312 இடங்களை கைப்பற்றியது போல நிச்சயம் இம்முறை பாஜகவுக்கு அதீத வெற்றி நிச்சயம் கிடைக்காது என்பதையும் திட்டவட்டமாக ஒரு சேர அரசியல் நோக்கர்கள் கூறி வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உ.பி. தேர்தல் களத்தில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறித்து https://www.moneycontrol.com/ இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: உ.பி. சட்டசபை தேர்தல் களத்தில் பாஜக, சமாஜ்வாதி கட்சி தலைமையில் ராஷ்டிரிய லோக் தள், எஸ்.பி.எஸ்.பி. ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என 4 முனை போட்டி நிலவுகிறது.

சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யையும் வாபஸ் பெறாவிட்டால்.... மத்திய பாஜக அரசுக்கு ஓவைசி வார்னிங் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யையும் வாபஸ் பெறாவிட்டால்.... மத்திய பாஜக அரசுக்கு ஓவைசி வார்னிங்

100 இடங்கள் குறையும்?

100 இடங்கள் குறையும்?

இந்த தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பாக கருத்து கணிப்புகள், பொதுவாக பாஜக ஆட்சியை தக்க வைக்கும்; ஆனால் 2017-ம் ஆண்டு பெற்ற இடங்களைவிட குறைவாகத்தான் கிடைக்கும் என்கின்றன. ஏபிபி நியூஸ்-சிவோட்டர் கடந்த நவம்பர் 12-ந் தேதி கருத்து கணிப்புகளை வெளியிட்டிருந்தது. அதில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் 2017-ல் பெற்ற இடங்களை விட 100 இடங்கள் குறைவாகத்தான் பாஜகவுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 2017-ம் ஆண்டு 312 இடங்களைப் பெற்ற பாஜகவுக்கு 2022 தேர்தலில் 213 முதல் 221 இடங்கள் கிடைக்கக் கூடும் என்றது அக்கருத்து கணிப்பு. 403 இடங்களைக் கொண்ட உ.பி. சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 202. இதே கருத்து கணிப்பு சமாஜ்வாதி கட்சிக்கு 152-160 இடங்கள் கிடைக்கும் என்றது. கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிடுகையில் சமாஜ்வாதி கட்சிக்கு 47 தொகுதிகள் கூடுதலாக கிடைக்கலாம் என்கிறது இந்த கணிப்பு. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 16 முதல் 20 இடங்கள்தான் கிடைக்கும் என கணித்திருந்தது. கடந்த 2017-ல் பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் வென்றிருந்தது.

உ.பி. தேர்தல் கருத்து கணிப்பு

உ.பி. தேர்தல் கருத்து கணிப்பு

இதற்கு அடுத்ததாக டைஸ்ம் நவ்-போல்ஸ்ட்ராட் கருத்து கணிப்பு முடிவுகள் நவம்பர் 16-ல் வெளியிடப்பட்டன. அதில் பாஜகவுக்கு 239-245; சமாஜ்வாதி கட்சிக்கு 119-125; பகுஜன் சமாஜ் காட்சிக்கு 28-32; காங்கிரஸுக்கு 5-8 இடங்கள் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு பெரும்பான்மைக்கான இடங்கள் கிடைக்கும் என்பதை சொன்னாலும் கூட சமாஜ்வாதி கட்சி விஸ்வரூபம் எடுத்து வருகிறது என்பதையும் கோடிட்டு காட்டியிருக்கிறது. இந்த விஸ்வரூபம் தொடர்ந்து நீடித்தால் தேர்தல் நேரத்தில் இந்த கருத்து கணிப்புகள் பொய்த்து போகவும் வாய்ப்பிருக்கிறது என்பதையும் இவை சொல்கின்றன.

மே.வங்க கணிப்புகள் பொய்

மே.வங்க கணிப்புகள் பொய்

ஆனால் சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அப்படியே நடக்கும் என சொல்ல முடியாது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். இதற்கு உதாரணமாக மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே உக்கிரமான போட்டி இருக்கும் என்றே பொதுவாக அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் பாஜகவால் 77 இடங்களைத்தான் பெற முடிந்தது என்பது நிதர்சனம் மேலும் உ.பி. தேர்தல் தொடர்பாக பாஜக நடத்திய கருத்து கணிப்புகளும் கூட நெகட்டிவ்வாகத்தான் இருந்தன என்றும் சில மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமரின் செல்வாக்கு

பிரதமரின் செல்வாக்கு

இது ஒருபுறம் இருக்க, உ.பி. தேர்தல் களத்தில் பிரதமர் மோடியின் செல்வாக்கு என்பது குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் ஒரு கருத்தை முன்வைக்கின்றனர். 2014, 2017, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் பாஜக மிகப் பெரிய அளவுகளுக்கு வாக்குகளைப் பெறுவதற்கு மோடியின் செல்வாக்கு பிரதான காரணியாக இருந்தது; ஆனால் மோடியின் செல்வாக்கு இப்போது சரிவை சந்தித்துள்ளது; இதற்கு மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஒரு உதாரணம் என்கிற கருத்தையும் சீனியர் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் மேற்கு வங்க தேர்தல் களத்தில் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அத்தனை ஆக்ரோஷமான பிரசாரம் மேற்கொண்டனர். ஆனாலும் அம்மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தை பாஜகவால் கைப்பற்ற முடியாமல் போனது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கின்றனர் அவர்கள். ஆனால் இதனை ஒருதரப்பு நிராகரிக்கவும் செய்கின்றனர். 2016 சட்டசபை தேர்தலில் வெறும் 3 இடங்களைத்தான் மேற்கு வங்கத்தில் பாஜக பெற்றது; ஆனால் தற்போதைய தேர்தலில் 77 இடங்களை கைப்பற்றி இருப்பதற்கு பிரதமர் மோடியின் ஆளுமை ஏற்படுத்திய தாக்கமும் காரணம் என்கின்றனர்.

ஒற்றுமையில்லாத எதிர்க்கட்சிகள்

ஒற்றுமையில்லாத எதிர்க்கட்சிகள்

இதற்கு அப்பால் உ.பி. தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகள் அத்தனையும் ஆளுக்கு ஒரு திசையில் நிற்கின்றன. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மட்டும்தான் 2 சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரஸும் 403 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவோம் என அறிவித்துள்ளன. இவை அல்லாமல் ஓவைசியின் மஜ்லிஸ்ட் கட்சி 100 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் இந்த ஒற்றுமையின்மையால் இயல்பாகவே பாஜகவுக்கு வெற்றி கிடைக்கும் சூழ்நிலையும் உருவாக்கப்பட்டிருக்கிறது. லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ்-ன் சஞ்சய் குமார் இது தொடர்பாக எழுதிய கட்டுரை ஒன்றில், பாஜக என்பது மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது; இப்படியான செல்வாக்குடன் திகழும் ஒரு கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மிகவும் அவசியமானது என்கிறார். ஆனால் உ.பி. தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கண்ணுக்கெட்டிய தொலைவில் சாத்தியமே இல்லை என்கிற போது பாஜகவுக்கு எட்டிவிடும் தூரத்தில்தான் வெற்றி என்பதாகவும் இருக்கிறது.

பாஜக ஆட்சிக்கு எதிரான அலை

பாஜக ஆட்சிக்கு எதிரான அலை

உ.பி.தேர்தல் களத்தில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான அலை என்பது இருக்கவே செய்கிறது என்பது பொதுவான கருத்து. மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பின்மை, கல்வி, சுகாதாரத்தில் பெரும் பின்னடைவு, மோசமான சட்டம் ஒழுங்கு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வி, கங்கையில் மிதந்த உடல்கள் என முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் தோல்விகளுக்கு போடப்படும் பட்டியல் நீண்டதாகவும் இருக்கிறது. ஹத்ராஸ் பலாத்கார சம்பவத்தில் அதிகாலையில் உடலை எரியூட்டியது; லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்தது போன்ற சம்பவங்கள் அவ்வளவு எளிதாக மக்களால் மறந்துவிடக் கூடியதாக இருக்காது. இதனை சமாளிக்கும் வகையில்தான் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி உள்ளிட்டோர் மூலம் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றும் வருகின்றன. யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிரான அதிருப்தி அலையை இத்தகைய நிகழ்ச்சிகள் ஓரளவுக்கேனும் சமாளிக்கக் கூடிய சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இந்து வாக்குகள்

இந்து வாக்குகள்

இத்தனையையும் தாண்டி பாஜகவின் ஆகப் பெரும் ஆயுதமாக இருப்பது இந்துத்துவா கொள்கை. இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்துகிற பிரசார யுக்தி. இதற்கு மிக தோதாக கைகொடுத்துக் கொண்டிருக்கிறது அயோத்தியில் கட்டப்படுகிற பிரம்மாண்ட ராமர் கோவில். அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி, சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஆதரிக்கிறது; மண்ணின் மைந்தர்களுக்கு ஆபத்து என பிரசாரம் செய்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அறுவடை செய்தது. பாஜகவின் பொதுவான இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் யுக்தியை ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் உ.பி.யில் தொடங்கிவிட்டனர். இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரசாரங்கள், பாஜகவின் பொதுக்கூட்டங்களில் உச்சஸ்தாயில் இருப்பதையும் கவனிக்க முடிகிறது. சிறுபான்மையினருக்கு ஆதரவான காங்கிரஸின் போக்கை கடுமையாக சாடுவதையும் பாஜக பார்க்க முடிகிறது. அதேநேரத்தில் இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்தி உ.பி.யில் பாஜக வென்றது எல்லாம் பழைய கதை.. இனிமேல் அப்படி எல்லாம் நடக்க சாத்தியமே இல்லை என்கிற பார்வையையும் அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர்.

வாக்கு சதவீதம் அதிகரிப்பு

வாக்கு சதவீதம் அதிகரிப்பு

2012-ம் ஆண்டுக்கு முந்தைய உ.பி. தேர்தல் களத்தில் பாஜக சொற்ப இடங்களில்தான் வென்றது. 2014 லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 80 லோக்சபா தொகுதிகளில் 71 இடங்களை பாஜக அள்ளியது. அதாவது 2009-ம் ஆண்டு 17.5% ஆக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம், 2014-ல் 42.63% ஆக உயர்ந்தது. 2012 சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்குகள் 15%; 2017-ம் ஆண்டு தேர்தலில் 25% வாக்குகள் கூடுதலாக பாஜகவுக்கு கிடைத்தன. 2017-ல் பாஜகவுக்கு மொத்தம் 39.67% வாக்குகள் கிடைத்தன. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 312 இடங்களை பாஜக கைப்பற்றி அசத்தியது. இருந்த போதும்... லோக்சபா தேர்தலில் 49.97% வாக்குகளைப் பெற்ற பாஜக, 2014 தேர்தலை ஒப்பிடுகையில் 9 இடங்கள் குறைவாகத்தான் பெற்றதையும் பார்க்க வேண்டும். உ.பி. தேர்தல் களத்தைப் பொறுத்தவரையில் அது சட்டசபை தேர்தல் என்றாலும் லோக்சபா தேர்தல் என்றாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து கொண்டே போகிறது; தனித்து நிற்கும் எதிர்க்கட்சிகளால் பாஜகவின் இந்த வெற்றியைத் தடுக்க முடியவில்லை. அதேநேரத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பாஜகவுக்கு ஆகப் பெரும் சவாலாக இருக்கும். குறிப்பாக பாஜக அரசுக்கு எதிரான அதிருப்தி அலைக்கு நடுவே வெற்றிக் கொடியை மீண்டும் பறக்க விடுமா பாஜக? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

English summary
Here is an analysis article on BJP and UP Assembly Election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X