தனியார் கூட்டு முயற்சியால் மேலும் வளர்ச்சி சாத்தியமாகும்.. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக வெற்றிக்கொடி நாட்டியுள்ள நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு புதிய புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது நிலுவையில் இருக்கும் திட்டங்கள் மற்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து செயல்படுத்திட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசியுள்ள அவர், " கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி சுமார் ரூ.1450 கோடி மதிப்பில் 352 வளர்ச்சி திட்டங்களை நாங்கள் தொடங்கி வைத்திருக்கிறோம். இதேபோன்று திட்டங்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனில் நாடு 2047ம் ஆண்டு வல்லரசாகும். அடல் பிஹாரி வாஜ்பாய் லக்னோவை மேம்படுத்துவது குறித்து கனவு கண்டார். அப்போதைய பிரதமராக இருந்த அவரும், அப்போதைய நெடுஞ்சாலை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங்கும் பல புதிய திட்டங்களை உத்தரப் பிரதேசத்திற்காக அறிவித்தனர்.
அவர்கள் அறிவித்த திட்டங்களால்தான் இன்று உத்தரப் பிரதேசம் தேசிய அளவில் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இந்த சிறப்பு வாய்ந்த ரூ.1450 கோடி மதிப்பிலான 352 வளர்ச்சித் திட்டங்கள். இது வெறும் சாம்பில்தான். இதற்கு முன்னர் பாஜக பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறது. இதற்கு ஓர் சிறந்த உதாரணம் முதலீட்டாளர்கள் மாநாடுதான். முதலீட்டாளர்கள் மாநாடு வழக்கமாக டெல்லி, மும்பையில்தான் நடக்கும்.
ஆனால் நாங்கள் முதலீட்டாளர்களை உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வந்துள்ளோம். எதை முடியாது என்று சொன்னார்களோ, அதை நாங்கள் வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறோம். அதேபோல பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்கியுள்ளோம். இந்த பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். இனி எதிர்காலமே தனியார்-அரசு கூட்டுதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications