உ.பி. தேர்தல்: பாஜக மீது நிதிஷ்குமாரின் ஜேடியூ கடும் அதிருப்தி- தனித்து போட்டியிடுவதாக அறிவிப்பு!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்ட்டசபைத் தேர்தலில் பாஜக தங்களை மதிக்காததால் தனித்து போட்டியிடுவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. பாஜகவின் இந்த போக்கு குறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவுடன் பல பிரச்சனைகளில் முரண்பட்டாலும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு தொடர்ந்து நடைபெறுகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் விரும்பியது. ஆனால் பாஜகவோ ஐக்கிய ஜனதா தளம் கட்சியை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து உ.பி.யில் தனித்து போட்டியிடுவது என ஐக்கிய ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

மதிக்காத பாஜக
இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான கே.சி.தியாகி கூறியதாவது: உ.பி.யில் எங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மறுத்துவிட்டது பாஜக. அப்னா தள், நிஷாத் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி போதும் என கூறிவிட்டது பாஜக. நம்பிக்கையான கூட்டணி என்ற அடிப்படையில் பாஜக தலைவர்களை சந்தித்து பேசினோம். ஆனால் எங்களுடன் கூட்டணி வைக்க பாஜக தலைவர்கள் விரும்பவில்லை. ஆகையால் உ.பி. தேர்தலில் தனித்தே நாங்கள் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என்றார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான உபேந்திர குஷாவா, பாஜகவின் இந்த முடிவுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

குர்மி வாக்குகள்
நிதிஷ்குமார் கட்சியும் உ.பி. தேர்தல் களத்தில் இறங்குவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. உ.பி.யின் குர்மி ஜாதியினர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு தருவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய வியூகம் வகுத்திருக்கும் அகிலேஷுக்கு குர்மி ஜாதி ஓட்டுகள் கிடைப்பதை நிதிஷ்குமார் கட்சி தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

7 கட்டங்களாக தேர்தல்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் 7 கட்டங்களாக பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல்கள் நடைபெற உள்ளன. பிப்ரவரி 10-ல் முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

பாஜகவில் இருந்து விலகல்
உ.பி.யில் ஏற்கனவே பாஜகவில் இருந்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த நிலையில் பீகார் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் இப்போது பாஜகவுடன் மல்லுக்கட்டிக் கொண்டு தனியே தேர்தலில் போட்டியிடுகிறது.












Click it and Unblock the Notifications