உபி முதல்வராக நாளை பதவியேற்கும் யோகி ஆதித்யநாத்.. பிரம்மாண்ட விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
லக்னோ: உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், யோகி ஆதித்யநாத் நாளை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
உத்தரப் பிரதேசம். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குக் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் ஆட்சியில் இருந்த பாஜக அப்படியே தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.
குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே எந்தவொரு ஆளும் கட்சியும் அரசைத் தக்க வைத்துக் கொண்டது இல்லை.

உத்தரப் பிரதேசம்
இந்தச் சூழலில் தான், யோகி ஆதித்யநாத் தலைமையில் தேர்தலை எதிர்கொண்ட பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தம் உள்ள 403 தொகுதியில் 255 தொகுதியில் பாஜக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், 41% வாக்குகளையும் பாஜக பெற்றுள்ளது.. இந்த வெற்றியின் மூலம் 37 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கு ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியால் வெறும் 111 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்துள்ள நிலையில், காங். 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பாஜக
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில், இன்று லக்னோவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், யோகி ஆதித்யநாத் பாஜகவின் சட்டசபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு முன்பு, உத்தரப் பிரதேச பாஜக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முக்கிய ஆலோசனை
மேலும், முதல்வர் யோகி ஆதித்யநாத், உபி பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜக தேசிய துணைத் தலைவர் ராதா மோகன் சிங், தினேஷ் சர்மா, கேபி மவுரியா ஆகியோரும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் புதிய அமைச்சரவை குறித்தும் வரும் நாட்களில் செய்ய வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்து இருந்தாலும் கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் வென்ற இடங்கள் குறைந்து இருந்த நிலையில், அது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நாளை பதவியேற்பு விழா
இந்தச் சூழலில், மேற்கு வங்க முதல்வராக யோகி ஆதித்யநாத் 2ஆவது முறையாகப் பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக நாளை கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் உயர்மட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர். மேலும், சமீபத்தில் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹிந்தி திரைப்படமான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படக்குழுவிற்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications