'இது சிங்கப்பூர் இல்லை எங்க ஊர் சஹரன்பூர்..' வைரலாகும் யோகி விளம்பரம்.. வைச்சு செய்யும் நெட்டிசன்கள்
லக்னோ: யோகி அரசின் சாதனைகளை விளக்கி பாஜக வெளியிட்ட விளம்பரத்தில் கொல்கத்தா பாலத்தின் படம் இடம் பெற்றிருந்தது. இதை திரிணாமுல் தலைவர்கள் மட்டுமின்றி நெட்டிசன்களும் சேர்ந்து கலாய்த்து ட்வீட் செய்து வருகின்றனர்.
பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது உத்தரப் பிரதேசம். இப்போது அங்கு யோகி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு மீண்டும் தேர்தலில் வென்று, ஆட்சியில் தொடர வேண்டும் என்றை முனைப்புடன் பாஜக களமிறங்குகிறது.

பாஜக விளம்பரம்
இதற்கான பணிகளை கொரோனா 2ஆம் அலை முடிந்த உடனேயே பாஜக ஆரம்பித்துவிட்டது எனச் சொல்லலாம். உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக யோகி அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்த விளம்பரங்களை பாஜக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பை எப்படி யோகி ஆத்தியநாத் மாற்றியுள்ளார் என்பதை விளக்கும் வகையிலான ஒரு பக்கம் விளம்பரம் ஒன்று பிரபல செய்தித்தாள் ஒன்றில் வெளியானது.

கொல்கத்தா மேம்பாலம்
நல்ல விஷயம் தானே! இதில் என்ன தவறு எனக் கேட்கிறீர்களா? விளம்பரம் எல்லாம் நன்றாக தான் இருந்தது. ஆனால் விளம்பரத்தில் இருந்த சில கட்டுமானங்களை யோகி அரசு மேற்கொண்டிருக்கவில்லை அது தான் பிரச்சினை. சொல்லப்போனால் அவை உத்தரப் பிரதேசத்திலேயே இல்லாதவை, 'Transforming Uttar Pradesh under Yogi Adityanath' என்ற தலைப்பில் வெளியான இந்த விளம்பரத்தில் இடம் பெற்றுள்ள மேம்பாலம் இருப்பது மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில்..! அந்த கட்டியவர் பாஜகவுக்குச் சிம்ம சொப்பனம் திகழ்ந்து வரும் மம்தா பானர்ஜி.

சம்பவம் செய்யும் நெட்டிசன்கள்
சும்மாவே கன்டென்ட் கிடைக்காமல் ஏங்கும் நெட்டிசன்கள், இதுபோன்ற டாப்பிக்கை விட்டுவிடவா போகிறார்கள். இன்று காலை முதலே ட்விட்டர் டிரெண்டிங்க என்றால் இந்த விளம்பரம் தான். திரிணாமுல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் அனைவருமே இந்த விளம்பரத்தை வைத்துச் செய்து வருகின்றனர். சிங்கப்பூரில் எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ஷ்யாம் ரங்கீலா, "உத்தரப் பிரதேசத்தில் இது எந்த இடம் எனக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் " எனப் பதிவிட்டுள்ளார்.

நம்புங்கள் இது தான் பரேலி
அஸ்லிம் அலி என்ற நபர் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, 'உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியின் அழகிய படம்' நக்கலடித்துள்ளார்.

சிங்கப்பூர் இல்லை சஹரன்பூர்
அதேபோல நவாஸ் ஆலம் என்ற நபர் தான் சிங்கப்பூரில் எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளார். இது உத்தரப் பிரதேசத்தின் ட்விட்டரின் சஹரன்பூர் நகரம், ஆனால் யோகி அரசை வெறுப்புவர்கள் இதைச் சிங்கப்பூர் என்று சொல்வார்கள் எனக் கிண்டல் செய்துள்ளார்

பளபளக்கும் காட்டில் இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையம்
இன்னும் சிலரோ வெளிநாட்டின் கட்டிடங்களின் புகைப்படங்களை பகிர்ந்து உபி அரசின் கட்டிடங்கள் தான் இவை என்ற ரீதியிலும் கலாய்த்து வருகின்றனர். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்த ஒரு நபர், யோகி அரசின் கோரக்பூரின் காட்டுப் பகுதியான காரியாவில் இருக்கும் ஆரம்பச் சுகாதார நிலையத்தின் படம் எனப் பதிவிட்டுக் கலாய்த்துள்ளார்,

இது தான் எங்க ஊர் பஞ்சாயத்து அலுவலகம்
பிரகாஷ் யாதவ் என்ற நபர் இவர்களை அனைவரையும் தூக்கியே சாப்பிட்டுவிட்டார் என்றே செல்லலாம். வெள்ளை மாளிகையின் புகைப்படத்தைப் பகிர்ந்த இவர், உத்தரப் பிரதேசத்தின் சலர்பூர் உள்ள புதிய பஞ்சாயத்து அலுவலகம் என்று பதிவிட்டு சம்பவம் செய்துள்ளார்.

திருடுவது தான் சாதனையா?
நெட்டிசன்கள் மட்டுமின்றி பல்வேறு திரிணாமுல் தலைவர்களும்கூட இந்த விளம்பரத்தைக் கிண்டல் செய்துள்ளார். மம்தாவின் உறவினரும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அபிஷேக் பானர்ஜி தனது ட்விட்டரில், "யோகி ஆதித்யநாத்தை பொறுத்தவரை உ.பி.யை மாற்றுவது என்றால் மம்தா அரசு வங்கத்தில் கட்டிய பாலங்களின் படங்களைத் திருடி தனது சாதனையாகக் கூறிக் கொள்வது போல!" எனப் பதிவிட்டுள்ளார்.

விளம்பர கம்பெனி சரியில்லை
அதேபோல திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, "யோகி விளம்பரத்தில் கொல்கத்தாவின் மா மேம்பாலம், JW மேரியட் ஹோட்டல் மற்றும் எங்கள் ஐக்கானிக் மஞ்சள் டாக்ஸிகள். உங்கள் நினைப்பை மாற்ற முயலுங்கள் அல்லது குறைந்தபட்சம் உங்கள் விளம்பர நிறுவனத்தையாவது மாற்றங்கள் ஜி. இதற்கும் என்மீது இப்போது நொய்டாவில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன்" என ட்வீட் செய்துள்ளார். இன்றைத் தினம் முழுவதுமே கொல்கத்தா பாலத்தைக் கடன் வாங்கி செய்யப்பட்ட இந்த விளம்பரம் தான் டவிட்டர் டிரெண்டிங்..!












Click it and Unblock the Notifications