மதுரையில் எய்ம்ஸ்... 2024ஆம் ஆண்டுக்குள் கொண்டு வந்து சேர்ப்போம் - எம்பி சு.வெங்கடேசன்
2024 ஆம் ஆண்டிற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்த வேண்டி தொடர்ந்து தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.
மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளுக்காக ஜப்பான் நிறுவனம் கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி விட்டன. கால தாமதம் ஆவதை தவிர்க்க தென் தமிழக எம்பிக்கள் போராடி கொண்டிருக்கிறோம் என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் கூறியுள்ளார். விரைவில் எய்ம்ஸை கொண்டு வந்து சேர்ப்போம் என்றும் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து 2015ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் 2018ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதிதான் தமிழ்நாட்டில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது என்பதே நான்கு ஆண்டுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. கடந்த சட்டசபை தேர்தலின் போது எய்ம்ஸ் மருத்துவமனை வெறும் செங்கல் மட்டுமே உள்ளதாக கூறி திமுக உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
இதனிடையே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையுடன் தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவ மனை புதிதாக இணைப்ப தால் திட்டமிடப்பட்டச் செலவு தொகையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது, ரூ.1200 கோடி யிலிருந்து ரூ.2000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரை எய்ம்ஸ் இதற்கிடையே மருத்துவமனை கட்டுமானத்துக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட செலவுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அதில், இந்த ஆண்டு மருத்துவமனை கட்டுமானத்துக்காக எந்த செலவும் இல்லை. இதுவரை ஒட்டுமொத்தமாக இதுவரை 12 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக ஜப்பானுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தாமதமாவது தொடர்பான வழக்கில் சமீபத்தில் தீர்ப்பணித்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை இன்னும் 36 மாதத்தில் மத்திய அரசு முழுமையாக விசாரித்து முடிக்கும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்புகிறது. நீதிமன்ற உத்தரவுகளை எதிர் பார்க்காமல் 36 மாதத்தில் கட்டுமான பணிகளை மத்திய அரசு முடித்துக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இந்தநிலையில் 2024ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸை கொண்டு வந்து சேர்ப்போம் என்று கூறியுள்ளார் மதுரை எம்.பி சு. வெங்கடேசன், மக்கள் பிரதிநிதிகள் அனுப்பும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ள நிலையில், அந்த வழக்கில் திறம்பட வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டும் நிகழ்வு மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழக்கறிஞர்கள் கண்ணன், புகழேந்தி மற்றும் குழுவினருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை அதிகமாகி கொண்டிருக்கிறது. அரசின் 80 சதவிகிதம் திட்டங்களுக்கு இந்தியிலே பெயர் சூட்டப்படுகிறது. இந்தியாவின் மொழி சமத்துவத்திற்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்துள்ளது.
இந்தி பேசாத மாநில மக்களின் மொழி உரிமையை காக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி முடித்த வழக்கறிஞர் கண்ணன், புகழேந்தி மற்றும் குழுவினருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
சமீபத்தில் எய்ம்ஸ்க்கான நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மதுரை எய்ம்ஸ் 2024 ஆம் ஆண்டிற்குள் நடத்தி கொடுப்பதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜப்பான் நிறுவனம் கடன் கொடுப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகி விட்டன. கால தாமதம் ஆவதை தவிர்க்க தென் தமிழக எம்பிக்கள் போராடி கொண்டிருக்கிறோம். விரைவில் எய்ம்ஸை கொண்டு வந்து சேர்ப்போம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications