வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை.. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஹைகோர்ட்டில் வழக்கு
மதுரை: கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக அரசு விதித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு நாள்தோறும் டன் கணக்கில் கனிம வளங்கள் எடுத்து செல்லப்பட்டன. ஜல்லி, கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் டாரஸ் லாரிகளில் சாரை சாரையாக அணிவகுத்து வெளி மாநிலங்களுக்கு சென்றன. தமிழக கேரள பார்டர்களில் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமங்கள் எடுத்து செல்லப்பட்ட நிலையில், இவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்தது.

கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை
கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த தவெக, பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கனிம வளத்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. உரிமம் இன்றி இயங்கி வந்த குவாரிகள் மீது நடவடிக்கை பாய்ந்தது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இருந்து கனிமவளங்களை வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
தமிழக அரசின் இந்த தடைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். வெளி மாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதால், தமிழ்நாட்டில் ஜல்லி உள்ளிட்ட பொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படும் சூழல் இருப்பதாலும், விலை உயரும் அபாயம் இருப்பதாலும் அதனைக் கட்டுப்படுத்த இந்த அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஐகோர்ட்டில் மனு தாக்கல்
தமிழக அரசின் தடையால் கேரளாவுக்கு செல்லும் சாலைகளில் கனிமங்கள் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியுள்ளன. தமிழக அரசு தற்போது விதித்துள்ள இந்த தடையை நிரந்தரமாக நீட்டிக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், தமிழக அரசின் இந்த தடைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த லிபின் பொன்னுசாமி லீலா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
