இந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்!
மதுரை: "இந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. அப்பறம் நீ ஊருக்குள்ள இருக்கறதா வேணாமான்னு யோசிச்சுக்கோ" என்று பிளேடால் சரவணகுமார் முதுகை கிழித்த சக மாணவனின் குடும்பத்தினர் மிரட்டல் விடுக்கிறார்களாம்!
மதுரை மாவட்டம் பாலமேட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் சரவணகுமார்.
2 நாளைக்கு முன்பு, ஸ்கூல் முடியும்நேரம், இவரது பையை சக மாணவன் மகா ஈஸ்வரன் என்பவர் விளையாட்டுக்கு ஒளித்து வைத்துள்ளார். ஸ்கூல் பையை காணாமல் நிறைய நேரம் தேடி கொண்டே இருந்த சரணவக்குமார், பிறகு "ஏன் என் பையை ஒளிச்சு வெச்சே" என்று மகா ஈஸ்வரனிடம் கோபப்பட்டுள்ளார்.

தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த மகா ஈஸ்வரன், "எவ்ளோ தைரியம் இருந்தா, என்னை பார்த்து கேள்வி கேட்பே" என்று கடுமையாக தாக்கியதுடன், பைக்குள் வைத்திருந்த பிளேடை எடுத்து, அவனது முதுகிலும் கிழித்துவிட்டார். இதனால் வலி தாங்க முடியாமல் சரவணக்குமார் கத்தியுள்ளார்.

அலறல்
அதற்குள் பக்கத்தில் இருந்த மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சரவணக்குமார் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனால் நிறைய அவமானங்களை பள்ளியில் சந்தித்துள்ளாராம். இந்த செய்தி கடந்த 2 நாட்களாக தமிழக மக்களை உலுக்கி வருகிறது.

ராசாத்தி
இந்நிலையில், சரவணகுமாரின் அம்மா ராசாத்தி, மாவட்ட கலெக்டரை சந்தித்து, இழப்பீடு வேண்டும் என்று கோரி மனு அளித்துள்ளார். பிறகு செய்தியாளர்களிடமும் பேசினார். அப்போது சரவணகுமார் சாதி பிரச்சனைகளை பள்ளியில் சந்தித்ததை பற்றி கண்ணீருடன் எடுத்து கூறினார்.

சாதி பிரச்சனை
"நாங்க பாலமேடு மறவர்பட்டி காலனியில் குடியிருக்கிறோம். அந்த இடத்தில் ஏற்கெனவே சாதியை காரணம் காட்டி சின்ன சின்ன பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது. என் பையன் ஸ்கூலுக்கு போகும்போதெல்லாம் அவன் சைக்கிள்ல காத்தை புடுங்கி விட்டுருவாங்க. சின்ன பிரச்னையை பெரிசு பண்ண கூடாதுன்னு பலமுறை பொறுத்துக்கிட்டோம்.

தண்ணி புடிக்க முடியாது
இப்போ பிளேடால் என் பையன் முதுகை மகா ஈஸ்வரன் கிழிச்சிட்டான். ஆனா, அவங்க அம்மா, அப்பா என்கிட்ட 500 ரூபாய் தந்து, கேஸ் எதுவும் போடாதே.. ஊருக்குள்ள நீங்க இருக்கணுமா? வேணாமான்னு கேட்கறாங்க. ஊருக்குள்ள நடமாட முடியாது, தண்ணி புடிக்க முடியாது, ரேஷன் கடையில் ஒன்னும் வாங்க முடியாதுன்னு பயமுறுத்தறாங்க.

விசாரணை
இன்னைக்கு என் பையனுக்கு நடந்ததுபோல, வேற எந்த மாணவனுக்கும் நடக்ககூடாது. என் பையனுக்கு இழப்பீடு வேணும்னு கலெக்டர் கிட்ட மனு தந்துள்ளேன்" என்றார் கண்ணீருடன். சரவணக்குமாரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மகா ஈஸ்வரன் மீது எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அலங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!