"தத்தளிக்கும் மதுரை" தண்ணீர் தேங்கவில்லையா? பச்சை பொய் பேசும் அமைச்சர்கள்.. விளாசும் ஆர்பி உதயகுமார்
மதுரை: வடகிழக்கு பருவமழையால் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று திமுக அமைச்சர்கள் பச்சை பொய்யை பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள சூழ்நிலையில் மழைநீர் தேங்கி தமிழகமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் போல் பச்சை பொய் பேசுகின்ற அமைச்சர்கள், இப்பொழுதும் பச்சை பொய் பேசி வருகிறார்கள்.
சொத்து வரி மற்றும் மின்சார கட்ட உயர்வினால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர்கள் பச்சை பொய் பேசி வருகிறார்கள். பால் உயர்வினால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பொய் பேசுகிறார்கள். அதேசமயம் முழுபூசணிக்காயை மறைப்பது போல் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்று நகர்துறை அமைச்சர் கேஎன் நேரு பொய் பேசுகிறார்

முதல்வர் பேச மறுக்கிறார்
அதேபோல் கோவையில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனையை பேச வாய் திறக்க முதலமைச்சர் மறுத்துவருகிறார். ஆனால் அரசின் சாதனைகள் என்று இல்லாத விஷயங்களை பேச மட்டும் முதலமைச்சர் வாய் திறக்கிறார். இருக்கக்கூடிய விஷயங்களையும் வெளிப்படையான நிர்வாகத்தை பற்றியும் முதலமைச்சர் பேச மறுத்து வருகிறார்.

பால் விலை உயர்வு
பால் விலை உயர்வு மற்றும் மின்சார கட்டண உயர்வை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு குறைவு என்று கூறுகிறார்கள். நாங்கள் மற்ற மாநிலங்களை பார்க்கத் தேவையில்லை. நாங்கள் தமிழகத்தை தான் பார்க்க முடியும். தமிழகத்தில் மக்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியை மட்டுமே திமுகவினர் மேற்கொள்கிறார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வழி செய்யவில்லை என்று தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு
தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தோழமைக் கட்சிகளின் தலைவர்களை வைத்து பேச வைக்கிறார். அதனை சட்டமன்றத்திலும் பேச வைக்கிறார். அவர்கள் எல்லோரும் சொல்லிவைத்து போல தலையாட்டி பொம்மைகளை போல முதலமைச்சர் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதையே அவர்கள் சட்டமன்றத்தில் பேசி வருகிறார்கள்.

அருணா ஜெகதீசன் ஆணையம்
அருணா ஜெகதீசன் ஆணையத்தை அமைத்தது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். தூத்துக்குடி சம்பவத்திற்கு முன்பும் பின்பும் பல்வேறு நிலைகளில் மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது கிடையாது. வன்முறை தலை தூக்கிய பிறகுதான் அதிகாரிகள் அதுபோன்ற நிலையை எடுத்துள்ளார்கள் என்பது விளக்கியுள்ளனர்.

திமுக ஆட்சியில் துப்பாக்கிச்சூடு
ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் மீதும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது சரியான முன்னுதாரணமாக இருக்காது. சட்டம் ஒழுங்கை நிலை நாட்டை இனி எந்த காவல்துறை அதிகாரிகள் முன்வருவார்கள். திமுக ஆட்சியின் போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது கிடையாதா? அப்பொழுதெல்லாம் அரசு அதிகாரிகளையோ முதலமைச்சரையோ பொறுப்பாக்கி உள்ளார்களா? பிரதான எதிர்க்கட்சியின் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று தெரிவித்தார்.

வாக்குறுதிகள் என்ன ஆனது?
தொடர்ந்து நாங்கள் நாடகம் போடக்கூடிய இயக்கம் அல்ல. தேர்தலின் போது திமுக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தது. ஆனால் நிறைவேற்றியதா என்ன? கல்விக் கடன் மற்றும் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல விஷயங்களை சொன்னார்கள். இதுவரை எதுவுமே செய்யவில்லை.எதிர்க்கட்சி சொல்வது என்பது மக்கள் நலனுக்காக மட்டுமே தவிர எங்கள் நலனுக்காக அல்ல என்று தெரிவித்தார்.

வெள்ள தடுப்பு நடவடிக்கை
அதேபோல் வெள்ள தடுப்பு நடவடிக்கைக்காக முதல் முதலில் நிதி ஒதுக்கி செயல்பட்டது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான்.
பல்வேறு பொறுப்புகளில் முதலமைச்சர் ஸ்டாலின் இருந்துள்ளார். ஆனால் தற்சமயம் முதலமைச்சராக ஆனவுடன் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. நீர் மேலாண்மை திட்டத்திற்கு உங்களுடைய ஆட்சிக்காலத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தொலைநோக்கி திட்டம் தொடங்கியது உண்டா?

தத்தளிக்கும் மதுரை
மதுரை மாநகராட்சி நிர்வாகம் இன்று முடங்கி போய் கிடக்கிறது. இன்று சிறிய மழை தான் பெய்து உள்ளது. இனி பெரிய கனமழை கிடையாது. புயலை நாம் இன்னும் எதிர் கொள்ளவில்லை. இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கிறார்கள். மக்கள் யாரிடம் கோரிக்கை வைப்பது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அதேபோல் போக்குவரத்து சட்டத்திருத்தம் என்பது மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு போடக்கூடிய அபராத தொகை என்பது மிகவும் அதிகமானது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications