"அண்ணாமலை சொல்வது எல்லாம் வேத வாக்கு கிடையாது.." சிண்டு முடியாதீங்க.. கடுகடுத்த செல்லூர் ராஜூ
மதுரை: எங்களுக்கு அண்ணாமலை சொல்வது வேத வாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் எங்களுக்கு வேதவாக்கு. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சி தொண்டர்களை தாண்டி பொதுமக்களும் வரவேற்கிறார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. எடப்பாடி பழனிசாமியை கட்சி தொண்டர்களை தாண்டி பொதுமக்களும் வரவேற்கிறார்கள்.

அண்ணாமலை சொல்வது வேதவாக்கு இல்லை
கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை அவர் கருத்தை சொல்லி இருக்கிறார். வரும் நாடளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்று அமித்ஷா சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமியும் இதை சொல்லிவிட்டார். எங்களுக்கு அண்ணாமலை சொல்வது வேதவாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமி சொல்வதுதான் எங்களுக்கு வேதவாக்கு. இவ்வாறு அவர் கூறினார்.

கட்சியை வளர்ப்பதற்காக
தொடர்ந்து, தற்போது இருக்கும் சூழலில் அதிமுகவிற்கு பாஜக தேவையா? இல்லை பாஜகவிற்கு அதிமுக தேவையா? தென் மாவட்டங்களில் பெரிய அளவில் வளர்ந்து வருகிறோம் என்று அண்ணாமலை சொல்லி வருகிறாரே அதைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, "அண்ணாமலை அவர் கட்சியை வளர்ப்பதற்காக ஒரு தலைவர் சொல்லும் கருத்தை தான் சொல்லியிருக்கிறார்.

தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச
அதில் தவறான கருத்து எதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது இல்லை. அண்ணாமலை அவர் கருத்தை சொல்லி இருக்கிறார். அதிமுக வலுவோடும் பொலிவோடும் இருப்பது அனைவருக்கும் தெரியும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எனவே இப்போதே கூட்டணிக்குள் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச வேண்டியது இல்லை. அவர்கள் கட்சிக்குள் பேசியிருக்கிறார்கள். நிர்வாகிகள் கூட்டத்தில் எல். முருகனும், அண்ணாமலையும் பேசியிருக்கிறார்கள்.

ஜேபி நட்டா சொல்லிவிட்டார்
இது குறித்து எல்லாம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது? அவர்கள் கட்சியில் அவர்கள் நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறார்கள். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசப்பட வேண்டியது. கூட்டணி தொடரும் என்று யார் சொல்ல வேண்டுமோ அவர்கள் சொல்லிவிட்டார்கள். அமித்ஷாவும், ஜேபி நட்டாவும் சொல்லிவிட்டார்கள். அதிமுக பொதுச்செயலாளரும் சொல்லிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது
முன்னதாக இன்று செய்தியாளர்களுக்கு பேட்ட்டி அளித்து இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது இப்போதே முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது என்று பேசியிருந்தார். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி மாநில தலைவராக நான் மேலிட தலைவர்களிடம் எடுத்து கூறுவேன்.

எத்தனை சீட் கொடுப்பார்கள்?,
கூட்டணி குறித்து தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற குழு ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கும். தமிழ்நாட்டில் பாஜக வளர வேண்டும். பாஜகவை வளர்க்க வேண்டும் என்பதற்காக தான் நான் மாநில தலைவராக இருக்கிறேன். அதனால் அமித்ஷாவின் பதிலை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதம் உள்ளது. எத்தனை சீட் கொடுப்பார்கள்?, எந்தெந்த சீட் கொடுப்பார்கள்? என்பதை பார்க்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கான கொள்கைகள், எந்தெந்த இடங்கள் வழங்கப்படுகிறது? என்பன போன்ற விஷயங்கள் உள்ளன.

இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது
இதனால் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இப்போதே முடிவெடுக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும்போது இப்போதே முன்னுரையும், முடிவுரையும் எழுதமுடியாது. இருப்பினும் கட்சி மேலிட உத்தரவுக்கு கட்டுப்படுவோம்'' என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் அண்ணாமலையின் கருத்து வேதவாக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்று செல்லூர் ராஜூகூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications