யானைப் பசிக்கு சோளப் பொறியா? இதுவரைக்கும் திமுக 22 ஆயிரம் தரணும்! பட்டியலை வாசித்த செல்லூர் ராஜூ!
மதுரை : திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், சிலிண்டர் மானியம் மாதம் 100 ரூபாய் வழங்கியிருந்தது என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்களுக்கும் திமுக அரசு 22 ஆயிரம் வழங்கியிருக்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் அதிமுக மதுரை மாவட்ட செயலாளருமான செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா 2011 தேர்தலை சந்திப்பதற்கு முன்னதாக கோவை மதுரை என பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார். கிட்டத்தட்ட மாநாட்டை விட அதிக கூட்டம் சேர்ந்தது.
அந்த ஆர்ப்பாட்டம் தான் அதிமுக ஆட்சி அமைப்பதற்கான ஒரு திறவுகோலாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு அடுத்து அதே வகையில் மாநாட்டை நடத்த வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாக இருக்கிறது.

செல்லூர் ராஜு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சீனியர்களும் ஒப்புக்கொண்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக இந்த பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. திமுக அரசின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு அதிமுக குறித்து மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநில மாநாடு நடத்த வேண்டும் என எடப்பாடி திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரகாசமான எதிர்காலம்
இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெறப் போவது உண்மை தான் என அதிமுக முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டி அம்மனை வேண்டியுள்ளேன், அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும். அதிமுக ஆட்சி விரைவில் வரவேண்டும் என பொதுமக்கள் எதிர்நோக்குகின்றனர். 2022ல் திமுக ஆட்சியில் இருந்தாலும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அழிக்கமுடியாத கல்வெட்டாக உள்ளது. அதிமுகவிற்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியானதாக சந்தோஷமாக இருக்கும்

பெரிய மாநாடு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விரைவில் பெரிய மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கவுள்ளோம். தனி மனிதர், தனி குடும்பம் என்பது இல்லாமல் ஜனநாயக அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதற்கு சாட்சியாக அதிமுக செயல்படுகிறது. வரும் ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும், புதிய வைரஸ் தொற்று இல்லாத ஆண்டாக மாற வேண்டும். திமுக அனைத்து மகளிர்களுக்கும் ஆயிரம் வழங்குவார்கள் என கூறினார்.

திமுக ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயும், சிலிண்டர் மானியம் மாதம் 100 ரூபாய் வழங்கியிருந்தது என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிர்களுக்கும் திமுக அரசு 22 ஆயிரம் கொடுத்திருக்கனும். ஆனால் கொடுக்கவில்லை. இப்போது பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய்க்கே தடுமாறி அறிவித்துள்ளார். அதிமுக போராட்டத்திற்கு பயந்து தான் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு அறிவிப்பு வந்துள்ளது

யானைப்பசிக்கு சோளப்பொறி
33 ரூபாய்க்கு எத்தனை அடி கரும்பு கொள்முதல் செய்து. எத்தனை அடி பொதுமக்களுக்கு வழங்குவார்கள் என தெரியவில்லை. எத்தனை அடி கரும்பு வழங்கப்படுகிறது என கடையில் எழுதி வைக்க வேண்டும். திமுக அரசு பல்வேறு வரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு பின்னர் அறிவித்த பொங்கல் பரிசு அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி என்பது போலதான் உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications