மதுரையில் புதிதாக வீடு கட்ட 3 மாதமாக அலைந்த டாஸ்மாக் சூப்பர்வைசர்.. நில அளவையருக்கு தரமான சம்பவம்
மதுரை: பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் போதும், புதிதாக வீடு கட்டும் போதும், பலர் நிலத்தை அளப்பது வழக்கம். நிலத்தை அளக்காமல் வீடு கட்ட வேண்டிய அளவுகளை சரியாக எடுக்க முடியாது.. அதேபோல் ஒருவர் வீடு கட்ட நிலம் வாங்கினால், அந்த நிலத்தில் உள்ள அளவும், பத்திரத்தில் உள்ள அளவும் சரியாக இருக்கிறதா என்பதை சர்வேயர் அளந்து உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் பட்டா கிடைக்கும். புதிய வீடு கட்ட முடியும்.மதுரையில் புதிதாக வீடு கட்ட நிலத்தை அளக்க விரும்பிய நபரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சர்வேயர் கையும் களவுமாக கைதாகி உள்ளார்.
தற்போதைய நிலையில் நில அளவை செய்வதற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு போகவே தேவையில்லை.. தாசில்தார் அலுவலகத்தில் உள்ள இசேவை மையத்திலோ அல்லது வேறு இசேவை மையம் மூலமாகவோ நிலத்தை அளக்க ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

நில அளவை செய்வதற்காக தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்காமல், இப்படி செய்ய வைத்ததன் நோக்கமே, மக்கள் சிரமத்தை சந்திக்கக்கூடாது.. கையூட்டு போன்ற பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொள்ளக்கூடாதுஎன்பதற்கு தான்.ஆனால் சில சர்வேயர்கள் என்ன தான் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும், நிலத்தை அளக்க வரும் போது, லஞ்சம் கேட்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
லஞ்சம் தர மறுப்போரின் மனுக்களை சிலர் கிடப்பில் போடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல் லஞ்சம் தந்தால் உடனே நிலத்தை அளந்து பட்டதா தருவதாகவும் சில இடங்களில் புகார்கள் உள்ளன. அதேநேரம் லஞ்சம் இல்லாமல் சர்வயேரை நிலத்தை அளக்க வைக்க விரும்புவோருக்கு சில இடங்களில் ஏமாற்றமே நடக்கிறது. மதுரையில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை அடுத்த ரத்தினபுரம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் பாலமுருகன் என்பவர் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு மதுரை கோவலன் நகர் பகுதியில் உள்ள சுப்புலட்சுமி நகரில் 2¾ சென்ட் இடம் வாங்கினார். அங்கு வீடு கட்ட எண்ணிய பாலமுருகன் அதற்கு அத்துமால் கேட்டு (நிலத்தை அளந்து கொடுக்க) 3 மாதத்திற்கு முன்பு மனு மூலம் விண்ணப்பித்திருக்கிறார்.. ஆனால் இடத்தை அளந்து கொடுக்காமல் பல்வேறு காரணங்களை கூறி அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாலமுருகன் அவனியாபுரம் பிர்கா சர்வேயர் ராஜசேகரை (36) சந்தித்து கேட்டார். அப்போது அவர் அதனால் பயப்பட தேவையில்லை. மீண்டும் மனுவை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கூறினாராம்.. அதை தொடர்ந்து கடந்த மாதம் 31-ந் தேதி ஆன்லைன் மூலம் மீண்டும் விண்ணப்பித்தார். ஆனால் அளந்து கொடுக்க சர்வேயர் வரவில்லை. இது தொடர்பாக பாலமுருகன் பலமுறை அலைக்கழிக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து ராஜசேகரிடம் கேட்ட போது ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் உடனே அளந்து கொடுப்பதாக தெரிவித்தாராம். இதனால் கோபம் அடைந்த பாலமுருகன் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து பாலமுருகனிடம் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரத்தை போலீசார் கொடுத்து அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து பாலமுருகன், ராஜசேகரை போனில் தொடர்பு கொண்டார். அவர் தெரிவித்த இடத்திற்கு சென்று ராஜசேகரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பணத்துடன் பிடித்து கைது செய்தார்கள்.இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications