மதுரை கூட்டுறவு சங்கத்தில் நகை மாயம்? கடனை கட்டியும் நகை கிடைக்கவில்லை.. 500 சவரன் எங்கே?
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்து கடன் வாங்கிய பொதுமக்கள், கடனை முழுமையாகச் செலுத்தியும் தங்களது நகைகள் திரும்பக் கிடைக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர். சுமார் 500 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படும் நிலையில், சங்க அலுவலகம் முன்பு பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது திருமங்கலத்தில்?
திருமங்கலம் அருகே வீரபெருமாள்புரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகிறார்கள்..

மதுரை திருமங்கலம் கூட்டுறவு சங்கம்
விவசாய தேவைகள், குடும்பச் செலவுகள் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கு இந்த கூட்டுறவு சங்கத்தின் நகைக்கடனை நம்பியே உள்ளனர்.
இப்படி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்கள், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளனர். சிலர் முழுப் பணத்தையும் செலுத்திய பிறகும் தங்களது நகைகளை திரும்பக் கேட்டபோது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. பணம் செலுத்தியதற்கான ரசீதுகள் இருந்தும் நகைகளை ஒப்படைக்காமல் சங்க நிர்வாகம் காலம் கடத்தியதாகவும் தற்போது புகார் எழுந்துள்ளது.
செயலாளர் தலைமறைவா?
அதுமட்டுமல்ல, நகைகளை திருப்பி கொடுக்க வேண்டிய சங்கச் செயலாளர் மணிகண்டன் முறையாகப் பதிலளிக்காமல் இருந்தாராம்.. நகைகளைக் கேட்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வந்ததுடன், சங்கத்துக்கும் வராமல் இருந்துள்ளார்.. இப்போது 500 சவரன் நகைகளுடன் அவர் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.
இதனால் ஏமாற்றமும், அதிருப்தியுமடைந்த பொதுமக்கள், வீரபெருமாள்புரம் கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகைகளை மீட்டுத் தருவதுடன், செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்,.
பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்து 1 லட்சம் ரூபாய் கடன் பெற்றவர்கள்கூட இருக்கிறார்கள். வீட்டில் நகைகள் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் அடமானம் வைத்தோம். கடன் தள்ளுபடி தொடர்பாக ரூ.5,000, ரூ.10,000 எனக் கேட்டபோதும் பணம் கட்டினோம்.
ஆனால், இப்போது நகைகளுக்கும் பதில் இல்லை, நாங்கள் செலுத்திய பணத்துக்கும் பதில் இல்லை. இந்த சங்கத்தில் சுமார் 500 சவரன் நகைகள் இருக்கலாம் என்று நினைக்கிறோம்.
கடன் ரசீது
கடந்த அக்டோபர் 12ம் தேதி கடனை முழுமையாகச் செலுத்திய பெண் ஒருவருக்கு ரசீது வழங்காமல், அவரிடம் இருந்த ரசீதையும் திரும்ப வாங்கியிருக்கிறார்கள்.. நகையைக் கேட்டபோது செயலாளர் மருத்துவமனையில் இருப்பதாகவும், 2 நாட்களில் வந்துவிடுவதாகவும் சொன்னார்கள்.. ஆனால் அவர் வரவில்லை.. கடந்த 2ம் தேதி இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
பல வருடங்களாக இந்தச் சங்கத்தில் நகைகளை அடமானம் வைத்து வருகிறோம். முன்பெல்லாம் முறையாக வட்டி வசூலித்து வந்த நிர்வாகம், இப்போது கடனை செலுத்திய பிறகும் நகைகளை திருப்பி கொடுக்கவில்லை..
செக்ரேட்டரி எங்கே
15 நாட்களுக்கு முன்பு பணத்தை வாங்கி கொண்டு, நகைகளை திருப்பித் தருவதாக சொன்னார்கள். ஆனால் அதற்கு பிறகு அலுவலகத்தை பூட்டிவிட்டார்கள்.. சிலருக்கு மட்டுமே நகைகள் திரும்ப கிடைத்தது.. ஏராளமான ஏழை மக்களின் நகைகளுக்கு எந்தப் பதிலும் இல்லை..
கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய நகைகளை இழக்கும் நிலை இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.. குடும்பத்தை நடத்துவதற்கே சிரமமாக உள்ளது. அதனால் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை உடனடியாக மீட்டுத் தர வேண்டும்.. செக்ரட்டரி மணிகண்டனை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பெண்கள் கண்ணீர் மல்க காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
