மார்க்கண்டேய கட்ஜு போட்ட திடீர் யூ-டர்ன்! ஸ்டாலினை விமர்சித்தவர் இப்போது உருகியது ஏன்? பின்னணி என்ன?
மதுரை: வழக்கமான சர்ச்சையான கருத்துகளை பேசி பரபரப்பை கிளப்பி விடுபவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு .. ஆளும் திமுக அரசை பற்றிகூட கடுமையான விமர்சனத்தை முன்வைத்தவர்.. இந்நிலையில், கட்ஜூ பதிவிட்டுள்ள ட்வீட், இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அது என்ன?
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான இவர் எப்போதும் சர்ச்சைக்குரிய உணர்வுப்பூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதையே வாடிக்கையாக வைத்திருப்பவர்.. அதனாலேயே எப்போதும் இவர் லைம்லைட்டில் இருந்து வருகிறார்.

கொரோனா நேரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடவுள் இருக்கிறார் எனில் அவர் ஏன் கொரோனாவை ஒழிக்கவில்லை. அவர் இருக்கிறார் எனில் ஏன் "ஏய் கொரோனாவே திரும்பி போ" என சொல்லவில்லை.. ஒருவேளை அவருக்கு மக்களை வேதனைப்படுத்தி பார்க்க பிடிக்குமோ"? என தாறுமாறாக கேள்வி எழுப்பியிருந்தார்..
பெண் வக்கீல்கள்
அதேபோல, "வழக்கு விசாரணையின் போது தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பதற்காக பெண் வக்கீல்கள் என்னை பார்த்து கண் அடிப்பார்கள்" என்று கட்ஜு கூறியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. உச்ச நீதிமன்றத்தின் பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, மார்க்கண்டேய கட்ஜுவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததையடுத்து, ஓடிச்சென்று மன்னிப்பு கேட்டது நினைவிருக்கலாம்..
அதேபோல கங்கனா ரனாவத்தை இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையில் சிக்கியவர் இவரேதான்.. தனது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் உடனடியாக அதற்கு மன்னிப்பும் கோரியவர்..
தேசப்பிதா மகாத்மா காந்தியை பிரிட்டிஷ் ஏஜெண்ட் எனவும் இந்தியாவுக்கு பெரும் தீங்கிழைத்தார் என்று கருத்துசொல்லி, அதற்கும் சேர்த்து வாங்கி கட்டிக்கொண்டவர்..
குறைந்தது 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள் என்றும் அவர்களை மதத்தின் பெயரால் எளிதாக ஏமாற்ற முடியும்" என்றும் பேசி நாலாபுறமும் விமர்சனத்திற்கு உள்ளானவர்..
மார்க்கண்டேய கட்ஜு
அவ்வளவு ஏன், கடந்த மாதம் கடந்த டிசம்பர் மாதம் யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானதற்கு, தமிழக அரசு மீது விமர்சனத்தை வைத்து கண்டனம் தெரிவித்திருந்தார் கட்ஜூ..
"தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை அதிகாரத்தை பயன்படுத்தி ஒடுக்க பார்க்கிறார்கள். பத்திரிகையாளர்கள் யாராவது உண்மையை பேசிவிட்டால் மிக மோசமான பின் விளைவுகளை சந்திக்கும் அளவிற்கு செய்து விடுகின்றனர். சவுக்கு சங்கர் தமிழகத்தின் பிரபல யூடியூபர். தைரியமாக எந்த ஒரு விஷயத்தையும் பேசக்கூடியவர். ஆளும் திமுக அரசின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டிருக்கிறார்.
சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தங்களுக்கு எதிராக விமர்சனங்கள் எதுவும் தலை தூக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்மூலம் வரவிருக்கும் தேர்தலில் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என கருதுகின்றனர்" என்றெல்லாம் சாடியிருந்தார்..
மதுரையில் கட்ஜூ
இந்நிலையில், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, மீண்டும் தன்னுடைய சோஷியல் மீடியாவில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.. ஆனால், அது வித்தியாசமான ட்வீட்டாக உள்ளது..
அந்த பதிவில், "மதுரையில் ஜன. 31ல் நடந்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி நிஷாபானுவின் மகன் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டேன். அன்றைய தினம் நடந்த எங்கள் சந்திப்பிற்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான எனது அபிப்ராயம் கணிசமாக உயர்ந்துள்ளது.
நான் இதற்கு முன்பு அவரை விமர்சிப்பவனாக இருந்தேன். இருந்தபோதிலும், அவரது பெருந்தன்மையான செயலால் நான் மிகவும் நெகிழ்ந்து போனேன். நான் திருமண வரவேற்பிற்கு சற்று முன்னதாகவே வந்து மேடையில் அமர்ந்திருந்தேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்
பின்னர் நான் கீழே இறங்கி வந்து முன் வரிசையில் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார். அவரை மேடைக்கு அழைத்துச் சென்றனர். அவர் மணமக்களை வாழ்த்தினார்.
அப்போது அவரிடம் நான் அங்கு வந்திருந்ததைப் பற்றி கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அவர் என்னைச் சந்திக்க விரைவாகக் கீழே இறங்கி வந்தார்.
"உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி" என்று கூறிய அவர், "நீங்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். "உங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி" என்றும் கூறினார். நான் இதற்கு முன்பு அவரை விமர்சித்திருந்தது தெரிந்திருந்தாலும், மிகவும் பெருந்தன்மையாகவும், மரியாதையாகவும் கூறினார்" என்று கட்ஜூ பதிவிட்டுள்ளார்..












Click it and Unblock the Notifications