திருக்குறள் பற்றிய ஆளுநரின் கருத்து.. விளம்பரத்திற்காக எதிர்க்கின்றனர்.. ஆர்பி உதயகுமார்!
மதுரை: திருக்குறள் பற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை சிலர் விளம்பரத்திற்காக எதிர்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை காந்தி அருங்காட்சிய வளாகத்தில் அதிமுகவின் அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தலைமையில் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று வளாகத்தில் அமைந்துள்ள புதர் மண்டிய பகுதிகளை தூய்மை செய்தனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

தூய்மைப் பணிகள்
அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் இந்தியாவில் சிறந்த நகரங்களுக்கான விருதினை மதுரையும்,சென்னையும் பெற்று இருந்தது. ஆனால் சமீபத்தில் 10 லட்சம் மக்கள் தொகை கணக்கீடு அடிப்படையில் 45 நகரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் சென்னை 44வது இடத்திலும், மதுரை கடைசி இடமான 45ல் இடம் பெற்றுள்ளது. அரசு நகரத் தூய்மையின் மீது கவனம் செலுத்தி பணியினை மேற்கொள்ள வேண்டும்.

சிறார் குற்றங்கள்
அதேபோல் தென் மாவட்டங்களில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. 6,095 வழக்குகள் சிறாருக்கு எதிரான குற்றங்கள் பதிவாகி உள்ளன. இதன் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும். தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகம் பின் தங்கியும், தற்கொலை பட்டியலில் இரண்டாம் இடமும் பிடித்துள்ளது என்று விமர்சித்தார்.

மழைநீர் வடிகால் பணிகள்
தொடர்ந்து, தமிழக முதல்வர் சென்னையில் 80 சதவிகித வடிகால் பணிகள் முடிந்ததாக கூறி இருக்கிறார். ஆனால் 30 முதல் 40 சதவிகிதம் வரையே பணிகள் நிறைவடைந்து இருப்பது கள நிலவரமாக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழையின் போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. அதேபோல அரசு வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போதைப்பொருள்
அதேபோல், போதைப்பொருள் தடுப்பு, ரவுடிகள் தடுப்பு என டிஜிபி பல திட்டங்களை செயல்படுத்துகிறார். ஆனால் அது நடைமுறையில் பெருமளவு பலனளிக்கவில்லை. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. அது போல சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தொடர்ந்து, திருக்குறள் பற்றி கருத்து தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தினை சிலர் விளம்பரத்திற்காக எதிர்த்து அரசியல் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, ஆளுநர் என முக்கிய தலைவர்களின் உரையில் திருக்குறளை குறிப்பிட்டு வருவது தமிழ் மொழிக்கான பெருமை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
