பாஜக ராம சீனிவாசனிடம் ரூ 50 லட்சம் அபேஸ்! போலீஸ் யூனிஃபார்மில் வந்தவர்கள் யார்? நண்பர் மீது வழக்கு
மதுரை: மதுரையில் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசனிடம் அவரது நண்பர் ரூ 50 லட்சம் மோசடி செய்ததா அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சட்டசபைத் தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக ராம சீனிவாசன் போட்டியிட்டார். அந்த சமயத்தில் திருப்பாலையில் வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார்.

அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்ததால் கட்டுமான செலவிற்காக என்ஜினியரிடம் கொடுக்குமாறு புதூரை சேர்ந்த நண்பர் பூமாறனிடம் ரூ 50 லட்சத்தை சீனிவாசன் கொடுத்து அனுப்பினாராம்.
இந்த நிலையில் பூமாறன் புறப்பட்ட சிறிது நேரத்தில் சீனிவாசனை அவர் தொடர்பு கொண்டாராம். அப்போது போலீஸ் யூனிஃபார்மில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச் சென்றுவிட்டதாக பதற்றத்துடன் தெரிவித்தாராம்.
இதையடுத்து சீனிவாசன் அவரை மீண்டும் தொடர்பு கொண்டு எங்கிருக்கிறீர்கள் என கேட்க முயன்றாராம். ஆனால் பூமாறனின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பூமாறன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்த சீனிவாசன் அவரை நேரில் சென்று பார்த்தார்.
அப்போது பூமாறன், "பணத்தை பறித்துச் சென்ற அந்த போலீஸ்காரர்கள் என்னை காரில் கடத்திச் சென்று ஒரு அறையில் அடித்து வைத்தனர். இதையடுத்து காலையில் ஏதோ ஒரு இடத்தில் காரில் இருந்து தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டது" என்றாராம்.
ஆனால் பூமாறன் சொல்வது உண்மை இல்லை என்பதை உணர்ந்த ராம சீனிவாசன் உடனே மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தாராம். இதையடுத்து பூமாறன் சொல்வது உண்மை என்பதை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு செய்தனர். அவர் சொன்னது போல் எதுவும் நடக்கவில்லை என்பதை அறிந்த போலீஸார், புகாரின் பேரில் பூமாறன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.


Click it and Unblock the Notifications
