பவர் காட்டும் ஆர்.பி.உதயகுமார்.. ‘வேற லெவலில் கணக்கு’- அதிமுகவில் செல்வாக்கை உயர்த்த ‘பலே’ பிளான்!
மதுரை : அதிமுகவில், ஓபிஎஸ் செல்வாக்கைச் சரிக்க எடப்பாடி பழனிசாமியால் களமிறக்கப் பட்டிருக்கும் ஆர்.பி.உதயகுமார், தென் மாவட்டங்களில் பலம் வாய்ந்த ஆள் நான் தான் எனக் காட்டுவதற்கான அடுத்தகட்ட திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஆர்.பி.உதயகுமார், ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டமான தேனியில் ஈபிஎஸ் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்தி முடித்தார்.
தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்கை, ஆர்.பி.உதயகுமாரை வைத்துச் சரிக்கலாம் எனக் கணக்குப் போட்டு செயல்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஆர்.பி.உதயகுமாரும், தன் பலத்தைக் காட்டி, அதிமுகவில் முக்கிய இடத்தைப் பிடிப்பதற்காக தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மீண்டும் ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் உதயகுமார்.

எடப்பாடி டீம்
அதிமுகவில் கடந்த ஒன்றரை மாதத்திற்கும் மேலாக நிலவி வரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில் ஜூலை 11ஆம் தேதி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர், பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் ஈபிஎஸ். ஓபிஎஸ் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் பறித்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பதவி யாருக்கு அளிக்கப்படும் என பெரிய போட்டியே நிலவி வந்த நிலையில், அந்தப் பதவியைப் பெற்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

உதயகுமார் செல்வாக்கு
ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான முகமாக அதே சமூகத்தைச் சேர்ந்த, தென் மாவட்டப் புள்ளியான ஆர்.பி.உதயகுமார் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கைச் சரிப்பதே இவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மெண்ட் என்று கூறப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாகத் தொடர்ச்சியாக ஓபிஎஸ்ஸை கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார் உதயகுமார். பதிலுக்கு, ஓபிஎஸ் தரப்பினரும் உதயகுமாரை குறிவைத்து அட்டாக் செய்து வருகின்றனர்.

ஓபிஎஸ் கோட்டையில்
சமீபத்தில், அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்தும்,சொத்துவரி, மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தேனியில் ஆர்ப்பாட்டத்தை நடத்தும் பொறுப்பை எதிர்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வசம் ஒப்படைத்தார் ஈபிஎஸ். பெரும் கூட்டத்தை திரட்டி சொந்த மாவட்டத்திலேயே ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க பக்கத்து மாவட்டங்களில் இருந்தெல்லாம் ஆட்களை இறக்கி கெத்து காட்டினார் ஆர்.பி.உதயகுமார். ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ் தரப்பு கூட்டிய கூட்டம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஈபிஎஸ்ஸே, ஆர்.பி.உதயகுமாரிடம் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மாஜிக்களுக்குள் பொறுமல்
இந்நிலையில், ஆர்.பி.உதயகுமாருக்கு ஈபிஎஸ் அதிக முக்கியத்துவம் கொடுப்பது மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு பொறுமலை ஏற்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனது பலத்தைக் காட்டும் வகையிலும், தென் தமிழகத்தில் வலுவான இடத்தைப் பிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும் மீண்டும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்த ஆர்.பி.உதயகுமார் திட்டமிட்டு வருகிறார். இந்தப் போராட்டத்துக்கு திரட்டும் கூட்டத்தைப் பார்த்து, அதிமுக மாஜிக்களே அசந்து போக வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம் உதயகுமார்.

5 மாவட்டங்களில்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார். இதுதொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஆர்.பி.உதயகுமார். அந்த வீடியோவில், முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டம் 137.50 அடியாக அதிகரித்து வரும் வேளையில், கடந்த 5ஆம் தேதி இடுக்கி அணைக்கு செல்லும் விதமாக, வினாடிக்கு 534 கன அடி நீரை தமிழக அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் தமிழக விவசாயிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஐந்து மாவட்ட விவசாயிகள் வயிற்றில் அடித்து கொடுமையான சம்பவத்தை திமுக அரசு நிகழ்த்தியுள்ளது.
விவசாயிகளின் இரண்டு ஆண்டு கால நம்பிக்கையை திமுக அரசு சீர்குலைத்துள்ளது.

விவசாயிகள்
இதனால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் சிறப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி, உச்ச நீதிமன்றத்தின் மூலம் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்த்த பின்பு 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்று தந்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதும், 3 முறை முல்லை பெரியாறு அணைநீர் மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது.

விவசாயிகளின் உரிமையைக் காக்க
எடப்பாடி பழனிசாமி தற்பொழுது முதலமைச்சராக இருந்திருந்தால், அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி காட்டி இருப்பார் என்று விவசாயிகள் மத்தியில் பேசி வருகின்றனர். தற்போது தி.மு.க அரசு கேரள அரசின் அழுத்தத்தை தூக்கி எறிந்து, மக்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். கேரளாவின் அழுத்தத்திற்கு தமிழக அரசு அடிபணிய கூடாது என்று விவசாயிகள் குரல் எழுப்பி வருகின்றனர். விவசாயிகளின் இந்த உரிமையை தமிழக அரசு காக்க முன்வர வேண்டும்.

மைலேஜ் ஏற்றிக்கொள்ள திட்டம்
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியை உயர்த்தாமல் உரிமை காக்க தவறி வருகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் விவசாயிகளின் விரோத போக்கை தி.மு.க அரசு தொடரருமேயானால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், 5 மாவட்ட மக்களை திரட்டி மாபெரும் போரா ட்டத்தை நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளார் ஆர்பி.உதயகுமார். இந்த ஆர்ப்பாட்டத்தை வைத்து தனக்கு மைலேஜ் ஏற்றிக்கொள்ளும் முயற்சியில் ஆர்பி.உதயகுமார் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications