நீங்க சொல்வதை கேட்க முடியாது! நிர்மல் குமாருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய TVK எம்எல்ஏக்கள்!
மதுரை: ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் மதுரை மாவட்ட உட்கட்சி பூசல் தற்போது வெளிப்படையான மோதலாக உருவெடுத்துள்ளது. மதுரை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள நிர்மல் குமாருக்கும், மாவட்டத்தின் உள்ளூர் எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையே தீவிர அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது.
அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே களத்தில் தொடர்ச்சியாக சலசலப்புகளும் வார்த்தை மோதல்களும் அரங்கேறி வருகின்றன.

போஸ்டர் விவகாரத்தில் வெடித்த மோதல்
இந்த மோதலின் பிரதான புள்ளியாக போஸ்டர் சர்ச்சை உருவெடுத்துள்ளது. மதுரை மாவட்டத்திற்கு நானே பொறுப்பு அமைச்சர்.. எனவே மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்கான போஸ்டர்கள், பேனர்களில் எனது படம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என அமைச்சர் நிர்மல் குமார் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த உத்தரவு, மதுரையில் நீண்டகாலமாக களப்பணியாற்றி வரும் தவெக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகரீதியான அதிகாரத்தை தங்களின் மீது திணிக்க அமைச்சர் முயல்வதாக உள்ளூர் நிர்வாகிகள் கருதுகின்றனர்.
பழைய நிர்வாகிகள் vs புதிய வரவு
குறிப்பாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய எம்எல்ஏக்களான கல்லணை மற்றும் தங்கபாண்டி ஆகியோர் இந்த விவகாரத்தில் கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கட்சி கட்டமைப்பைத் தென்மாவட்டத்தில் வலுப்படுத்திய தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், கடைசி நேரத்தில் தவெகவில் இணைந்து தேர்தல் வாய்ப்பு பெற்று வென்ற நிர்மல் குமார், அமைச்சராகி தங்களுக்கு உத்தரவு போடுவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற குரல் எழுந்துள்ளது.
களத்தில் நின்று இயக்கத்தை வளர்த்த எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவியில் வந்து அமர்ந்துகொண்டு, இன்று எங்களுக்கே கட்டளையிடுவதா? என்று எம்எல்ஏக்களின் ஆதரவாளர் வட்டம் கொந்தளித்து வருகிறது. அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பை ஓரங்கட்டிவிட்டு, புதிய வரவுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதாக அவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ஆனந்திடம் சென்ற புகார்
மதுரை மாவட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர், மூத்த அமைச்சரான ஆனந்துக்கு இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. "நிர்மல் குமார் மதுரையில் அதிகார ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இந்த இயக்கத்தை மதுரையில் ரத்தம் சிந்தி வளர்த்தது நாங்கள் தான்; எங்களை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவருக்கு தலைமை அறிவுறுத்த வேண்டும்" என எச்சரிக்கும் தொனியில் அத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாவட்ட அமைச்சரின் தலையீடு தொடர்ந்தால் அது களப்பணியாளர்களிடையே விரிசலை ஏற்படுத்தும் என்றும், உள்ளூர் பணிகளில் முட்டுக்கட்டை உருவாகும் என்றும் தலைமைக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ள சவால்
மதுரையில் வெடித்துள்ள இந்த அதிகார மோதல், ஆளும் தவெக தலைமைக்கு தென்மண்டலத்தில் பெரும் நிர்வாக சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் மாவட்ட பொறுப்பு அமைச்சரின் அதிகார வரம்பு, மறுபுறம் களத்தில் செல்வாக்கு மிக்க உள்ளூர் எம்.எல்.ஏ-க்களின் கோரிக்கை என இரு தரப்பையும் சமரசம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமை உள்ளது. இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் தலையிட்டு சுமூக தீர்வு காணாவிட்டால், மதுரை தவெக உட்கட்சி விவகாரம் தென்மாவட்டங்கள் முழுவதும் எதிரொலிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.


Click it and Unblock the Notifications
