TVK Vijay: சவுராஷ்டிரா மக்கள் ஆதரவு.. பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் தவெக.. விஜயால் மதுரையில் மாறும் கணக்கு!
மதுரை: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இம்முறை மதுரை மாவட்டம் அனைத்து கட்சிகளின் முக்கிய குறியாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே மதுரை மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்து வரும் நிலையில், அதனை முழுமையாக பிடிக்க திமுக தீவிரமாக இயங்கி வருகிறது.
அதேபோல் கடந்த தேர்தலில் பாஜக மதுரை மாவட்டத்தில் கணிசமான வாக்குகளை பெற்று 2வது இடத்திற்கு முன்னேறியது. இது அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவினர் மதுரை மாவட்டத்திற்கு என்று சிறப்பு கவனம் கொடுத்து வருகின்றனர். அதற்கேற்ப முருகன் மாநாடு, அமித் ஷா வருகை, மதுரை பொதுக்கூட்டம் என்று பாஜக அடுத்தடுத்து தீவிரம் காட்டி வருகிறது.

3 தொகுதிகள் குறி
அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பாஜக மீண்டும் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை வந்த அமித் ஷா, மதுரையில் 3 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக கூறியதாகவும், அந்த தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய 3 தொகுதிகளை பாஜக குறி வைத்திருக்கிறது.
செளராஷ்டிரா மக்கள் ஆதரவு
குறிப்பாக மதுரை தெற்கு மற்றும் மதுரை மேற்கு தொகுதியை பாஜக குறி வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக செளராஷ்டிரா மொழி பேசும் மக்கள் முக்கிய காரணமாக உள்ளனர். பாஜகவுக்கு தொடக்கம் முதலே செளராஷ்டிரா மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. பிரதமராக மோடி வந்த பிறகு, இந்த ஆதரவு அதிகரித்து வந்துள்ளது.
மதுரையில் செளராஷ்டிரா மக்கள்
அதுமட்டுமல்லாமல் மதுரையின் பல்வேறு தொகுதிகளில் செளராஷ்டிரா மொழி பேசும் மக்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி இருக்கின்றனர். மதுரையில் முக்குலத்தோர் சமூக மக்கள் அதிகளவில் இருந்தாலும், கணிசமான அளவில் செளராஷ்டிரா மொழி பேசுவோரும் அனைத்து பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.
மதுரை தெற்கில் மட்டும் 80 ஆயிரம் வாக்குகள்
உதாரணமாக மதுரை தெற்கு தொகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக செளராஷ்டிரா மக்களின் வாக்குகள் இருக்கின்றன. இதனாம் மதுரையில் மட்டும் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் செளராஷ்டிரா மொழி பேசும் மக்களுக்கு உள்ளது. இதன் காரணமாகவே 2011, 2016 மற்றும் 2021 ஆகிய தேர்தல்களில் அதிமுக தரப்பில் செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த எஸ்எஸ் சரவணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
செளராஷ்டிரா வேட்பாளர்கள்
அதேபோல் திமுக தரப்பிலும் பாலச்சந்திரன் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டிருக்கிறார். இதனால் செளராஷ்டிரா மக்களின் ஆதரவை பெறுவதற்காக பாஜகவினர் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பாஜகவின் முயற்சிகளுக்கு இம்முறை நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது.
விஜய்க்கு அதிகரிக்கும் ஆதரவு
செளராஷ்டிரா மொழி பேசும் இளைஞர்கள் பலரும் விஜய் ஆதரவாளராக மாறி இருக்கின்றனர். இதற்கு திரைக் கவர்ச்சி ஒரு விஷயம் என்றாலும், திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றான சக்தியாக விஜயை பார்க்கின்றனர். அதுமட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுகவில் போதுமான முக்கியத்துவம் தங்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்று செளராஷ்டிரா இளைஞர்கள் கருதுகிறார்கள்.
காரணம் என்ன?
இதனால் தவெகவில் தங்களை இணைத்து கொண்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அண்மையில் வெளியான தவெக ஐடி விங் நிர்வாகிகள் பட்டியலிலும் கூட செளராஷ்டிரா சமூக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பெண்கள் மத்தியிலும் விஜய்-க்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால், பாஜகவின் வாக்குகளை விஜய் துண்டாடக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.
மதுரை பாஜக
அதேபோல் மதுரை பாஜகவில் செளராஷ்டிரா மக்களின் வாக்குகளை பெற்றாலும், முக்குலத்தோர் சமூக மக்களின் வாக்குகளை பெறும் அளவிற்கு நட்சத்திர தலைவர்கள் இல்லை என்று பார்க்கப்படுகிறது. பாஜக பொதுச்செயலர் ராம சீனிவாசன் பிரபலமானவராக அறியப்பட்டாலும், முக்குலத்தோர் சமூக மக்கள் ஆதரவு இருக்குமா என்ற குழப்பம் இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications