சம்பளத்துடன் மாதவிடாய் விடுமுறை.. தமிழக அரசு - தனியார் ஊழியர்களுக்கு விரைவில் குட்நியூஸ்? ஆலோசனை
மதுரை: அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து வருகிறது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு கோரிக்கை என்னவென்றால் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்க வேண்டும் என்பதாகும். ஆனால் இதற்கென்று நம் நாட்டில் பிரத்யேகமான சட்டம் இல்லை.
இருப்பினும் ஒவ்வொரு அரசுகளும் தனித்தனியாக இந்த நடைமுறையை பின்பற்றி வருகின்றன. தற்போது பீகார், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இது ஒவ்வொரு மாநிலங்கும் வெவ்வேறாக உள்ளன.
பீகாரில் அரசு பெண் ஊழியர்களுக்கு மாதம் 2 நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பும், ஒடிசாவில் அரசு பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒருநாள், கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் 18 முதல் 52 வயது வரையிலான பெண்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு நடைமுறையில் உள்ளது.
ஆனால் தமிழ்நாட்டில் இதுபோன்ற நடைமுறை இல்லை. இதுதொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதாவது மதுரை சேர்ந்தவர் நர்மதா. இவர் லேப் டெக்னிஷியனாக உள்ளார். தற்போது அரசு பணியில் இருக்கிறார். இந்நிலையில் தான் நர்மதா மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''மாதவிடாய் காலத்தை பொருட்படுத்தாமல் பல பெண்கள் பணியாற்றி வருகின்றனர். ஆண் பணியாளர்களுக்கு இணையாக பணியாற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்து பெண்கள் பணிக்கு செல்கின்றனர். கர்நாடகா, பீகார், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மாதவிடாய் கால விடுப்புக்கு தனியாக கொள்கைகள் வகுககப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான கொள்கைகள் எதுவும் இல்லை. அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் நாளில் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் கொள்கையை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்தது. அப்போது தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறியது. அதன்பிறகு சட்டசபை தேர்தல் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திமுக தோல்வியடைந்ததால் தவெக ஆட்சியை பிடித்து முதல்வராக விஜய் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த வாரம் இந்த வழக்கு மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிவி கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக் கொள்கையையும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பொருத்தமான வழிக்காட்டுதல்களையும் உருவாக்கும் திட்டமிட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் அதுபற்றி ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அருசு சார்பில், ''மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஊதியத்துடன் விடுமுறை தர தலைமை செயலாளர், தொழிலாளர் நலத்துறை செயலாளர் ஆலோசித்து வருகின்றனர்'' என்று அரசு சார்பில் கூறப்பட்டது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றம் பெண்களுக்கு விடுப்பு வழங்க விதிமுறைகளை வகுப்பது பற்றி அதிகாரிகள் குழு அமைக்க முடியா? குழு அமைத்தால் அதனுடைய உறுப்பினர்கள் பற்றியும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.


Click it and Unblock the Notifications
