ஜனாதிபதி, பிரதமர்லாம் சொல்றாங்க.. முதல்வர் ஸ்டாலின் மறுப்பது ஏன்? - ஆர்பி உதயகுமார் கேள்வி!
மதுரை : பிரதமர், ஜனாதிபதி என அனைவரும் வாழ்த்துக் கூறும்போது தமிழக முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்து வருவதை பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மாநிலத்தின் முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின், வெகுமக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். எனினும், இந்த ஆண்டும் முதல்வர் ஸ்டாலின் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், முதல்வரின் செயலை விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.

பிரதமர் வாழ்த்து சொன்னார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் தீபாவளி திருநாளை உறவுகள், நட்போடு சேவை மனப்பான்மையுடன் எல்லோருக்கும் கொடுத்து மன மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. ஜனாதிபதியை தொடர்ந்து பிரதமர் மோடி கார்கில் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து கூறினர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆகியோர் வாழ்த்து கூறினர்.

முதல்வர் மனம் மறுப்பது ஏன்
மொழி கடந்து மாநிலம், நாடு கடந்து பண்பாட்டுடன் பாரம்பரியமாக கொண்டாடப்படுவது தீபாவளி திருநாள் ஆகும். தீமைகளை அகற்றி நன்மைகளை பரவ வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து சொல்வதில்லை. தி.மு.க. தலைவராக இருந்திருந்தால் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் தமிழக முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்ல மனம் மறுப்பது ஏன்?

திடுக்கிடும் தகவல்கள்
கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சம்பவ இடத்தை, நேரில் ஆய்வு செய்த காவல்துறை இயக்குநர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது
தீபாவளிக்கு 3 நாட்களில் மது விற்பனை ரூ.708 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? எதிர்க்கட்சியாக இருந்தபோது மதுவுக்கு எதிராக போராடிய முதலமைச்சர் இப்போது மது விற்பனைக்கு என்ன சொல்லப் போகிறார்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications