சொல்ல சொல்ல கேட்காத நடிகர் அஜய் தேவ்கன்.. பங்களாவை இடித்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள்
மும்பை: மும்பையில் அனுமதியின்றி கட்டுமானம் கட்டக்கூடாது என்று நடிகர் அஜய் தேவ்கனுக்கு கடந்த மாதம் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கினர். ஆனால் நடிகர் அஜய் தேவ்கன் அதனை கண்டுக்கொள்ளவில்லை. இதையடுத்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை அதிரடியாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இன்று இடித்து அகற்றினர்.

மும்பையில் வசித்து வருபவர் நடிகர் அஜய் தேவ்கன். இவருக்கு ஜுஹு உள்ள 'கபோல் கே ஆப்பரேட்டிவ் ஹவுசிங் சொசைட்டி' வளாகத்தில் பங்களா ஒன்று உள்ளது. இந்த பங்களா மொத்தம் 7,802 சதுர அடி கொண்டதாகும்.
இந்த பங்களாவை 'புளோரியன் ஹுரெல் சலூன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்திற்கு 5 ஆண்டு குத்தகைக்கு வழங்கி உள்ளார் அஜய் தேவ்கன்.
இந்த குத்தகையின் மொத்த மதிப்பு ரூ.10.61 கோடியாகும். மாத வடாகையாக ரூ.16 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோடு, ஆண்டுதோறும் 5 சதவீத வாடகை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பங்களாவை ஒப்பந்த அடிப்படையில் கைப்பற்றிய நிறுவனம் மாநகராட்சி அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக புகார் எழுந்தது.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உரிய அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வது தெரியவந்தது. பங்களாவின் உட்புறத்தில் மாற்றங்கள் செய்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் புதிய ஜன்னல்கள் அமைத்தல் என்று பல்வேறு கட்டுமான பணிகள் நடந்தது.
இதையடுத்து கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என்று கூறி கடந்த மாதம் மும்பை மாநகராட்சி சார்பில் நடிகர் அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நோட்டீஸ் கடந்த செப்டம்பர் 10ம் தேதி வழங்கப்பட்டது. மும்பை மாநகராட்சி சட்டம் 1888-ன் பிரிவு 354ஏயை மீறி கட்டுமானம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமானத்துக்கு உரிய அனுமதி வாங்கவில்லை. இதனை நிறுத்த வேண்டும் என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டு இருந்தது. ஆனால் அவர் தடுத்து நிறுத்தவில்லை.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அனுமதியின்றி கட்டப்பட்ட பங்களாவின் ஒரு பகுதியை இடித்து அகற்றினர். இதனை மும்பை மாநகராட்சி உறுதி செய்துள்ளது. இதுபற்றி மும்பை மாநகராட்சி சார்பில், ''மும்பை மாநகராட்சி சார்பில் ஜுஹு பகுதியில் உள்ள நடிகர் அஜய் தேவ்கனின் பங்களாவின் ஒரு பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
