ரூ.1,034 கோடி நிலமோசடி வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் சொத்துக்கள் முடக்கம்!
மும்பை: சிவசேனா கட்சியின் எம்பியாக சஞ்சய் ராவத்தின் ரூ.1,034 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இந்நிலையில், ‛சொத்து முடக்கத்துக்கு பயப்படமாட்டேன். உண்மை வெல்லும்' என அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்துகின்றன. சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார்.
பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில கூட்டணி கட்சி தலைவர்கள் மீது மத்திய விசாரணை அமைப்புகள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

சொத்துகள் முடக்கம்
இந்நிலையில் தான் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. அதாவது மும்பையில் ரூ.1,034 கோடி மதிப்புக்கு நிலமோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் சஞ்சய் ராவத்துக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை இன்று முடக்கி உள்ளது. அலிபாக்கில் உள்ள 8 நிலங்கள், மும்பை தாதரில் உள்ள ஒரு சொகுசு பங்களாவை முடக்கி உள்ளது.

பயப்பட மாட்டேன்
இதுபற்றி சஞ்சய் ராவத் கூறுகையில், ‛‛சொத்துகள் முடக்கத்தால் நான் பயப்படவில்லை.என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என நிரூபிப்பேன். உண்மை வெல்லும்'' என்றார். மேலும் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

மோசமாகும் இந்தியாவின் நிலை
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "இலங்கையின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகி உள்ளது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்தியா அந்த பாதையில் தான் செல்கிறது. இதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் இலங்கையை விட இந்தியாவின் நிலை மோசமாகிவிடும்.

அனைத்து கட்சி கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். எதிர்க்கட்சியினர் மீது மத்திய விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்குவதை விட ஜனநாயகத்தை வலுப்படுத்த மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். மேலும் மம்தா பானர்ஜி கூறியபடி அனைத்து கட்சியினரையும் அழைத்து பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications