மகாராஷ்டிரா பாஜக ஆட்சிக்கு ஆபத்து? சத்தமில்லாமல் டெல்லிக்கு ஓடிய ஷிண்டே.. வெடிக்கும் புதிய பூகம்பம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் என்டிஏ அரசில் இப்போது விரிசல் விழுந்துள்ளது போலவே தெரிகிறது. அங்கு பாஜக சிவசேனா இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. ஷிண்டே திடீரென டெல்லிக்குச் சென்று அமித் ஷாவை சந்தித்த நிலையில், இது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்போது என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு பாஜக- சிவசேனா- என்சிபி கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் சூழலில், ஷிண்டே மற்றும் அஜித் பவார் துணை முதல்வர்களாக இருக்கிறார்கள். அங்கு தான் இப்போது கூட்டணியில் குழப்பம் வெடித்துள்ளது.

சிவசேனா
மகாராஷ்டிராவில் இப்போது உள்ளாட்சி தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சிவசேனா கட்சி உள்ளூர் தலைவர்கள் சிலர் பாஜகவில் ஐக்கியமாகினர். கூட்டணியில் இருந்து கொண்டே சிவசேனா நிர்வாகிகளை பாஜக இழுப்பது சிவசேனா தலைவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அக்கட்சித் தலைவர்கள் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தான் சமீபத்தில் அங்கு நடந்த அமைச்சரவை கூட்டத்தையும் கூட 4 சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்தனர்.
டெல்லி ஓடிய ஷிண்டே
ஷிண்டேவும் கூட பாஜகவால் அதிருப்தி அடைந்துள்ளதாகவே தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் டெல்லிக்கு போய் அமித் ஷாவை சந்தித்துள்ளார். அங்குச் செய்தியாளர்களிடம் பீகார் வெற்றிக்கு வாழ்த்துக் கூற வந்தேன் என சொன்னாலும் கூட, அமித் ஷாவை சந்தித்து மகாராஷ்டிர மாநில பாஜக தலைமை மீது ஷிண்டே புகார்களை அடுக்கியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவான் மீது புகார் பட்டியலை வாசித்துள்ளார்.
கல்யாண்-டோம்பிவலி தொகுதியில் இருக்கும் சிவசேனா ஆதரவாளர்களை ரவீந்திர சவான் பாஜகவுக்கு இழுப்பதாகச் சாடியுள்ளார். இந்த கல்யாண்-டோம்பிவலி தொகுதியில்தான் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே எம்பியாக இருக்கிறார். மகனின் தொகுதியில் இருந்தே சிவசேனா நிர்வாகிகள் பாஜகவுக்கு போனால் அது தனது இமேஜை பாதிக்கும் என்பதாலேயே ஷிண்டே அப்சட் ஆகியிருக்கிறார்.
பாஜக திட்டவட்டம்
மகாராஷ்டிரா பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து ஷிண்டே சொன்ன புகார்களை அமித் ஷா கேட்டாலும் கூட அவர் எந்தவொரு நடவடிக்கை குறித்தும் உறுதியளிக்கவில்லையாம். மேலும், ஃபட்னாவிஸ் மற்றும் சவான் ஆகியோர் பாஜகவின் நலனுக்காக மட்டுமே செயல்படுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ளும்படி ஷிண்டேவுக்கு அமித் ஷா தரப்பு சொல்லியிருக்கிறது. மேலும், அமைச்சரவை கூட்டங்களை சிவசேனா அமைச்சர்கள் புறக்கணித்தது சரியில்லை எனச் சொல்லியும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர அரசியல் குறித்து அமித் ஷாவை சந்தித்து ஷிண்டே புகாரளிப்பது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு அங்கு என்டிஏ ஆட்சி அமைந்த பிறகு, அவர் பல முறை டெல்லிக்குச் சென்று பாஜக தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அமித் ஷாவை மட்டும் 12 முறைக்கு மேல் சந்தித்துள்ளார். குறிப்பாகக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரண்டு முறை அமித் ஷாவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக போடும் பிளான்
பாஜகவை பொறுத்தவரை அவர்கள் மகாராஷ்டிராவில் தங்கள் கட்சியை விரிவுபடுத்தத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதை தற்போது அவர்கள் நிறுத்துவது போல தெரியவில்லை. அங்கு என்னதான் என்டிஏ ஆட்சி தான் என்றாலும் பாஜக தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே அக்கட்சி தலைவர்கள் விருப்பம். 2029க்கு இதை இலக்காக வைத்தே பாஜக செயல்பட்டு வருகிறது.
அதற்கான முன்னோட்டமாகவே உள்ளாட்சித் தேர்தலை பார்க்கிறார்கள். இதன் காரணமாகவே மாற்றுக் கட்சிகளில் இருந்தும் பாஜகவில் நிர்வாகிகளை இணைத்து வருகிறார்கள். பாஜகவின் நீண்ட கால திட்டம் இப்படி இருப்பதால்.. ஷிண்டே அதிருப்தி தெரிவித்தாலும் கூட பாஜக கட்சியைத் தொடர்ந்து விரிவுபடுத்தும்!












Click it and Unblock the Notifications