"சந்திரசேகரன் இருக்கவே கூடாது.." எதிராக வந்த ஒரே ஓட்டு.. வாக்களித்த நபர் நோயல் டாடா தான்!
மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் தொடர்ந்து பதவி வகிப்பதற்கு அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இந்த முடிவுக்கு டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், டாடா குழுமத்துக்குள் மீண்டும் தலைமைப் பதவி தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது. இது குறித்து நாம் விரிவா பார்க்கலாம்!
இந்தியாவின் மிக பெரிய தொழில் குழுமமாக டாடா இருக்கிறது. உப்பு முதல் விமானம் வரை அனைத்தையும் உருவாக்கும் முக்கிய நிறுவனமாக டாடா சன்ஸ் இருக்கிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரன் கடந்த 2017ம் ஆண்டு முதல் இருந்து வந்தார்.

இருப்பினும், அவருக்கும் டாடா டிரஸ்ட் தலைவரும் டாடா குடும்ப வாரிசுமான நோயல் டாடாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. சந்திரசேகரன் எடுத்த சில முடிவுகளில் என் சந்திரசேகரனுக்கு உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. இதனால் சந்திரசேகரனை நீக்கிவிட்டு புதிய தலைவரை கொண்டு வர வேண்டும் என்பதே அவர்கள் இலக்காக இருக்கிறது.
டாடா சன்ஸ்
இதற்கிடையே இன்று செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் இயக்குநர் குழு கூட்டத்தில், சந்திரசேகரன் தொடர்ந்து தலைவராக இருப்பதற்கு ஆதரவாக 4 வாக்குகள் பதிவானது. எதிராக ஒரு வாக்கு மட்டுமே பதிவானதாக மணி கண்டரோல் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த நியமனத்துக்கு எதிராக தான் வாக்களித்ததாகவும், தனது எதிர்ப்பை மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் நோயல் டாடா தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு
மணி கண்டரோலுக்கு அளித்த பேட்டியில் நோயல் டாடா கூறுகையில், "சந்திரா தலைவராக நியமிக்கப்படுவதற்கு எதிராக நான் வாக்களித்தேன். சட்ட ஆலோசனையின் அடிப்படையில் எனது வீட்டோ தவறாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு சட்டவிரோதமானது. எனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் தலைமை விவகாரம் சில வாரங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், பிரச்சினையை மீண்டும் வெடித்துள்ளது.
விதிகள் சொல்வது என்ன
டாடா டிரஸ்ட்ஸ் சார்பில் டாடா சன்ஸ் இயக்குநர் குழுவில் நியமிக்கப்பட்ட இயக்குநர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒரு முக்கிய முடிவை ஏற்க வேண்டும் என டாடா சன்ஸ் விதிகள் கூறுகிறது. அதேநேரம் இயக்குநர் குழு கூட்டத்தில் வாக்குகள் சமமாகும் நிலையில், தலைவருக்கு வாக்கு செலுத்தும் அதிகாரம் இருப்பதாக கூறப்படுகிறது. நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ், சந்திரசேகரனை டாடா சன்ஸ் இயக்குநர் பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், தலைவராகவும் தொடர முடியாது என என்கிறார்கள்.
கேள்வி
சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் பதவியில் நீடிக்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான குழுவை அமைக்கும் பணியை டாடா தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் தற்போது டாடா சன்ஸ் இயக்குநர் குழுவே சந்திரா தலைமை பதவியில் தொடர்ந்து தலைவராக இருக்க ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கும் தேடுதல் குழு என்னவாகும் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
