மாடல் அழகியுடன் இருந்ததை பார்த்ததால் கோபம்.. மனைவி மீது காரை ஏற்றிய இந்திப்பட தயாரிப்பாளர் கைது
மும்பை: மாடல் அழகியுடன் இருந்ததை பார்த்துவிட்டதால் மனைவி மீது காரை ஏற்றிய இந்திப்பட தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ராவை மும்பை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் வசித்து வருபவர் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா. இந்தி படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறார்.
மும்பை அந்தேரியில் மேற்கு நியூ லிங்க் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

காரில் வேறு ஒரு பெண்ணுடன்
கமல் கிஷோர் மிஸ்ரா, தேஹாட்டி டிஸ்கோ உள்ளிட்ட இந்திய படங்களை தயாரித்து உள்ளார். இவரது மனைவி போஜ்புரி நடிகை யாஸ்மின் மிஸ்ரா. இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி அன்று கமல் கிஷோர் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடியிருப்பின் கார் பார்க்கிங் பகுதியில் நின்றதாக தெரிகிறது. அப்போது அவரை தேடி யாஸ்மின் கீழே வந்தார். இதை பார்த்ததும் கமல் கிஷோர் மிஸ்ரா அங்கிருந்து காரில் தப்பி செல்ல முயன்றார்.

காரால் இடித்து தள்ளினார்
அவர் மாடல் அழகி ஒருவருடன் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி யாஸ்மின் அவரை காரில் அங்கிருந்து செல்ல விடாமல் மறித்தார். ஆனால் கமல் கிஷோர் மிஸ்ரா காரை திருப்பிக்கொண்டு செல்ல முயன்றார். ஆனால் மனைவி யாஸ்மின் மீண்டும் மீண்டும் காரை செல்ல விடாமல் மறித்தார். இதனால் ஆத்திரமடைந்த கமல் கிஷோர் மிஸ்ரா மனைவி என்றும் பாராமல் அவரை காரால் இடித்து தள்ளினார்.

மனைவி மீது காரை ஏற்றினார்
அதோடு விடாமல் அவர் மீது காரை ஏற்றினார். இதில் காரின் முன்பக்க டயர் ஏறி இறங்கியது. அப்படியும் அவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். அங்கிருந்த காவலாளி ஒருவர் தான் காயமடைந்த யாஸ்மினை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மனைவி என்றும் பாராமல் அவர் மீது காரை ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசில் புகார்
இந்த நிலையில் தன் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றதாக கமல் கிஷோர் மிஸ்ரா மீது மும்பை அம்போலி போலீசில் யாஸ்மின் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 19-ஆம் தேதி அன்று கமல் கிஷோர் மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் காரில் இருந்தார். நான் அவரை தேடி அலைந்தேன். கீழே காரில் அவர் வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்ததும் அங்கிருந்து காரில் தப்பி செல்ல முயன்றார். அவரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுத்ததால் என் மீது காரை ஏற்றினார்.

கமல் கிஷோர் மிஸ்ரா கைது
இதில் எனக்கு கை, கால் உள்ளிட்ட இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சினிமா தயாரிப்பாளர் கமல் கிஷோர் மிஸ்ரா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கமல் கிஷோர் மிஸ்ராவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications